கோவை ரத்தினபுரியில் பொதுமக்கள், தொழில்முனைவோர் அவதி: மின்மாற்றி கோளாறால் அடிக்கடி மின்வெட்டு

கோவை ரத்தினபுரியில் பொதுமக்கள், தொழில்முனைவோர் அவதி: மின்மாற்றி கோளாறால் அடிக்கடி மின்வெட்டு
Updated on
1 min read

கோவை ரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றியில் ஏற்படும் கோளாறால் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ரத்தினபுரி நால்வர் லே-அவுட் பகுதி மக்கள் கூறியதாவது: இங்குள்ள மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஜீவா நகர் மின்மாற்றியிலிருந்து லாலாமஹால் ரோடு, செல்லப்பக் கவுண்டர் வீதி, மாரியம்மன் கோயில் வீதி, திருநாவுக்கரசர் வீதி, சுந்தரர் வீதி, முத்துக்குமார் நகர், ஜிபிஎம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள்,வணிக நிறுவனங்கள், கோயில்,பள்ளிக்கூடத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், ஆயிரக்கணக்கான மின் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுகிறது. சில நேரங்களில் காலை அல்லது மாலை நேரங்களில் ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலாகவே மின் தடை ஏற்படுகிறது. இதற்கு, ஜீவா நகர் மின்மாற்றியில் அடிக்கடி ஏற்படும் கோளாறே காரணம் என்கின்றனர். மாதாந்திரப் பராமரிப்பு பணி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகத்தை நிறுத்தி, மின்மாற்றியை சரிசெய்தாலும் இப்பிரச்சினை தீரவில்லை. மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எப்போது மின்சாரம் போகும், மீண்டும் எப்போது வரும் என்பதையே அறிந்துகொள்ள முடியாத சூழல் உள்ளது.

கடந்த ஜூலை 14-ம் தேதி பராமரிப்புப் பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டது. அதற்கடுத்த நாட்களில் வழக்கம்போல ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. ஜூலை 17-ம் தேதி காலையில் சுமார் 10 நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதேபோல, நேற்று முன்தினம் காலையிலும் 6 மணி முதல் 8.20 மணி வரை மின்சாரம் தடைபட்டது. எனவே, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண மின்வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

இதேபோல, மின்தடை குறித்த புகார் தெரிவிப்பதற்கு மின்வாரியம் அறிவித்துள்ள '1912' என்ற தொலைபேசி எண் சரிவர செயல்படுவதில்லை. பல மணி நேரம் முயற்சித்தாலும், இணைப்பு கிடைப்பதில்லை. எனவே, அருகில் உள்ள மின்வாரியஅலுவலக எண்களை வெளியிட்டு, மின் தடையின்போது பொதுமக்கள் தொடர்புகொள்ள வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in