

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி (மேற்கு) கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி மகன் அறிவழகன்(27), பொறியியல் பட்டப்பட்டிப்பு முடித்துவிட்டு தன் தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அறிவழகனுக்கு, திருச்சியிலிருந்து கூரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது என ஒரத்தநாட்டிலுள்ள கூரியர் நிறுவனத்திலிருந்து தகவல் வந்தது. இதையடுத்து கருணாநிதி ஒரத்தநாட்டுக்கு சென்று பார்சலை வாங்கிவந்து வீட்டில் வைத்தார்.
அறிவழகன் நேற்று அந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது, அதில் இருந்தவை வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடனடியாக கருணாநிதியும், அறிவழகனும் அவற்றை தங்களின் தென்னந்தோப்பில் பத்திரமாக வைத்துவிட்டு, ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வெடிகுண்டு நிபுணர் எஸ்எஸ்ஐ கணேசமூர்த்தி மற்றும் போலீஸார் கண்ணந்தங்குடிக்குச் சென்று வெடிபொருட்களை கைப்பற்றி சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியபோது, “திருச்சி தென்னூர் என போலியாக ஒரு முகவரியை குறிப்பிட்டு பார்சலை அனுப்பி வைத்துள்ளனர். பார்சலில் டெட்டனேட்டர் கனெக்டர், ஜெலட்டின் ஆகியவை இருந்தன. வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களான இவற்றை யார், எதற்காக அறிவழகனுக்கு அனுப்பி வைத்தனர் என முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இதில், திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை அடுத்த மானங்காட்டில் உள்ள ராஜா எக்ஸ்புளோசிவ் பிரைவேட் லிமிடெட், அதே பகுதியை சேர்ந்த லோசிவ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் இந்த வெடிகுண்டு மூலப் பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது தெரிய
வந்துள்ளது” என்றனர்.
அறிவழகன் கூறியதாவது: நான் திருச்சி மன்னார்புரம் கல்லுக்குழியிலுள்ள எல்பின் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தேன். பின்னர் என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை உறுப்பினராக சேர்த்து, சுமார் ரூ.54
லட்சத்து 76 ஆயிரம் வரை பணம் செலுத்தியுள்ளேன். 10 மாதங்களில் 3 மடங்காக பணத்தை திருப்பித் தருவதாகக் கூறினர். ஆனால், அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை.
அவர்கள் கொடுத்த காசோலையும் பணம் இல்லை என வங்கியிலிருந்து திரும்பி வந்துவிட்டது. என்னிடம் பணம் கொடுத்தவர்கள், திருப்பித் தருமாறு கேட்டதால், கடந்த செப்.1-ம் தேதி தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சாவூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன். இந்நிலையில், என்னை மிரட்டுவதற்காக அந்த தனியார் நிதி நிறுவனத்தினர் வெடிகுண்டு தயாரிப்பு மூலப்பொருட்களை பார்சலில் அனுப்பி இருக்கலாம் என்றார்.