

திருநெல்வேலி மாவட்டம் பண்பொழி செயின்ட் ஜோசப் பள்ளி ஆசிரியர்கள் செங்கோட்டை நகரை சுத்தம்செய்து ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.
செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழி செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் அருள்தந்தை ரோனி, துணை முதல்வர் ஆண்டோ தலைமை வகித்தனர். மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், பள்ளி வளாகம் மற்றும் பண்பொழி ஊரின் முக்கிய வீதிகள், கோயில்கள், செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையின் சுற்றுப்பகுதிகள், பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி நகரை சுத்தம் செய்யும் பணியில் ஆசிரிய, ஆசிரியைகள் ஈடுபட்டனர்.
செங்கோட்டை நகரை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
செங்கோட்டை வாஞ்சிநாதன் சிலையின் சுற்றுப்பகுதிகள், பேருந்து நிலைய வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகளை ஆசிரியர்கள் அப்புறப்படுத்தினர்.