

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர் போராடவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாஜக இளைஞரணி சார்பில் நேற்று பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி, நடந்த ‘இளைஞர் எழுச்சிகூட்டத்தில்’ பங்கேற்றுப் அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாஜக - அதிமுக இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும், கூட்டணி தர்மத்தின் படி செயல்பட்டு வருகிறோம். மும்மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை, மூன்றாவது மொழியை, அந்தந்த மாவட்ட நிர்வாகமே தேர்வு செய்யலாம் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர்கள் நடத்தும் 47 பள்ளிகளில், மூன்றாவது மொழியாக இந்தி உள்ளது.
மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோதுதான், நீட் தேர்வு நடத்துவது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியானது. இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிகளவிலான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
நீட் தேர்வுக்கு எதிராக எந்த மாணவரும், பெற்றோரும் போராடவில்லை, அரசியல் கட்சித் தலைவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சரியான பதிலைத் தரும். தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் இனிமேல் நடக்காது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை, இந்தாண்டு தேர்வு முடிவுகள் வரும்போது அவரே தனது முடிவை மாற்றிக் கொள்வார் என்றார்.