Published : 19 Sep 2020 08:01 AM
Last Updated : 19 Sep 2020 08:01 AM

கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக உயர்நிலை கூட்டத்தில் ஆலோசனை: இபிஎஸ் - ஓபிஎஸ் வாழ்த்து கோஷங்களால் சலசலப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர், சசிகலா விடுதலை, மாவட்டங்கள் பிரிப்பு உள்ளிட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பு ஆதரவாளர்களின் வாழ்த்து கோஷங்களால் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்ந்து நிலவுகிறது. இதுதவிர, தேர்தலுக்கு முன்பு சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதிமுகவில் இன்னும் அவரது அபிமானிகள் இருக்கும் சூழலில், அவர் வெளியே வருவதும் சிக்கலானதாக கருதப்படுகிறது. தவிர, அதிருப்தி நிர்வாகிகளை சமாளிக்க வேண்டிய சூழலும் உள்ளது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நேற்று மாலை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை ஒருங்கிணைப்பாளர்கள் முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இதில் பங்கேற்றனர்.

முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓபிஎஸ் வந்தபோது, ‘அம்மாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்’ என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வந்தபோது, ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர்’ என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். ஏற்கெனவே முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தொண்டர்களின் இந்த முழக்கம் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம், 6.30 மணி வரை நடைபெற்றது. இதில், முதல்வர்வேட்பாளர், சசிகலா விடுதலை, மாவட்டங்கள் பிரிப்பு, நிர்வாகிகள்நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது ஓபிஎஸ் தரப்பினர், ‘‘முதல்வர் யார் என்பதைதேர்தல் முடிந்த பிறகு முடிவெடுக்கலாம். 2017 ஆகஸ்ட்டில் ஓபிஎஸ் -இபிஎஸ் அணிகள் இணைப்பின் போது, ஒப்புக்கொள்ளப்பட்டபடி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதை இபிஎஸ் தரப்பினர் ஏற்காததால், இரு தரப்பு மூத்த நிர்வாகிகள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்தும், சசிகலா விடுதலை பற்றியும் இனி யாரும் வெளியில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும், இவை தொடர்பாக அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில் பேசிக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டம் முடிந்த பிறகு, ஓபிஎஸ்,இபிஎஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள் மட்டும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான அறையில் அமர்ந்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடத்துவது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. இன்றைய கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி

கூட்டத்துக்கு வந்தவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அனைவருக்கும் கைகழுவும் திரவமும் தரப்பட்டது. கூட்ட மேடை உட்பட நிகழ்ச்சிக் கூடம் முழுவதும் போதிய இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x