

மத்திய சென்னை தொகுதி முன்னாள் எம்.பி. டாக்டர் ஏ.கலாநிதி (81), சென்னையில் நேற்று காலமானார்.
திமுக சார்பில் மத்திய சென்னைதொகுதியில் இருந்து 1980, 1984என இருமுறை நாடாளுமன்றமக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏ.கலாநிதி. திமுகவில் இருந்து விலகி மதிமுகவில் இணைந்த அவர், பின்னர் அரசியல்நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி,மருத்துவப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சென்னை அண்ணா நகரில் கே.எச்.எம். என்றபெயரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்புகலாநிதியின் மனைவி ஹேமமாலினி காலமானார். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில்மாரடைப்பால் கலாநிதி காலமானார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவரது உடல் நேற்றுமாலை தகனம் செய்யப்பட்டது.
முதல்வர் இரங்கல்
முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘முன்னாள் எம்.பி.டாக்டர் கலாநிதிமறைவு செய்தியறிந்து வருத்தம்அடைந்தோம். இந்த துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கவும், அவரது ஆன்மாஇறைவன் திருவடி நிழலில்இளைப்பாறவும் பிரார்த்திக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “திமுக சார்பில் இருமுறை எம்.பி.யாக இருந்த டாக்டர் அ.கலாநிதி மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனைப்பட்டேன். நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், மருத்துவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ஏழை, எளியமக்களுக்கு தொண்டு உள்ளத்துடன் மருத்துவப் பணி செய்தவர் கலாநிதி. நாடாளுமன்றத்தில் மிகச்சிறப்பாகப் பணியாற்றி கருணாநிதி, க.அன்பழகன் ஆகியோரிடம் பாராட்டு பெற்றவர். தமிழ் மொழி, தமிழ் இனம், திராவிட இயக்கத்தின் மீது பற்று கொண்டவர். என்மீது எல்லையற்ற அன்பு கொண்டவர்’ என்று கூறியுள்ளார்.