

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றிவந்த ஆண் யானை உயிரிழந்தது. மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் விழுந்த அதிர்ச்சியில் ஆண் யானை உயிரிழந்ததாக வன கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காலில் காயமடைந்த நிலையில் சுற்றிவந்த ஆண் யானையை மயக்க மருந்து செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க, கடந்த 11-ம் தேதி தலைமை வன உயிரினக் காப்பாளர் உத்தரவிட்டார். இதையடுத்து, இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் வனத்துறையினர் மேற்கொண்டனர். ஆனால், நெல்லித்துறை காப்புக்காட்டின் மலைப்பாங்கான நிலப்பகுதிக்கு யானை சென்றதால் மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சமதளப் பகுதிக்கு யானை வந்தபின் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (செப்.17) மாலை நெல்லித்துறை காப்புக் காட்டின் எல்லையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அந்த யானை இறந்திருப்பதை வனப்பணியாளர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷ், உதவி வனப்பாதுகாவலர் தினேஷ்குமார் முன்னிலையில், கோவை வன கால்நடை மருத்துவர் சுகுமார், தேக்கம்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் என்.எஸ்.மனோகரன் ஆகியோர் யானையின் உடலை இன்று (செப். 18) உடற்கூராய்வு செய்தனர்.
பிரேதப் பரிசோனைக்குப் பிறகு யானையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து மருத்துவர் சுகுமார் கூறும்போது, "கீழே வழுக்கி விழுந்தோ, மற்றொரு யானையுடன் சண்டைபோடும்போதோ சில மாதங்களுக்கு முன் யானையின் இடது முன்னங்காலின் மூட்டுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக இடது முன்னங்காலின் அடிப்பாகத்தை யானையால் நீண்ட நாட்களாக ஊன்றி நடக்க முடியவில்லை. அதனால், வலது முன்னங்காலுக்கு அழுத்தம் கொடுத்து யானை நடந்து வந்துள்ளது.
யானையின் உடம்பின் வலது பக்கத்தில் இருந்த புண், துப்பாக்கி குண்டால் ஏற்பட்டதாக சிலர் தவறான தகவலைப் பரப்பி வந்தனர். இது மேலோட்டமான புண், 2 வாரங்ககளுக்கு முன்பு, குன்னூர் ஆற்றங்கரையில் யானை சகதியில் சிக்கியபோது ஏற்பட்டது. மேலும், நேற்று முன்தினம் மற்றொரு ஆண் யானைக்கும், இந்த யானைக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன் தந்தம் குத்தியதால் யானையின் அடிவயிறு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்தன. இந்தச் சண்டையில் வழுக்கி விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு யானை இறந்துள்ளது. பிரதேப் பரிசோதனைக்குப் பிறகு யானையின் தந்தங்கள் அகற்றப்பட்டு, அதன் உடல் மற்ற விலங்குகள் சாப்பிடும் வகையில் அங்கேயே விடப்பட்டது" என்றார்.