Last Updated : 18 Sep, 2020 06:56 PM

 

Published : 18 Sep 2020 06:56 PM
Last Updated : 18 Sep 2020 06:56 PM

கரோனா பரவலைத் தடுக்க வீடுகளில் சிகிச்சை பெறுவோர் விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1,000 அபராதம்; புதுச்சேரியில் அமல்

கரோனா பரவலைத் தடுக்க வீடுகளில் சிகிச்சை பெறுவோர் விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1,000 அபராதம் விதிக்கும் முறை புதுச்சேரியில் அமலாகியுள்ளது. அதேபோல், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.

புதுச்சேரியில் கரோனா நோய்த் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. தற்போது நோய்த்தொற்று உள்ளோர் கண்டறியப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல், வீடுகளிலும் பலர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களோடு தொடர்பில் இருந்தோர், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் இருப்போரை விட வீடுகளில் அதிக அளவில் அதாவது, 2,975 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீட்டுத் தனிமையில் இருந்து மருத்துவம் பெறுவோர், தனிமைப்படுத்தப்பட்டோர் பலர் கட்டுப்பாட்டை மீறி வெளியே சுற்றுகிறார்கள். இதனால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகமாகிறது.

இதனால், நோய்த்தொற்று விதிமுறையின்படி, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, புதுச்சேரி ஆட்சியரும், சுகாதாரத்துறை செயலாளருமான அருண், இன்று (செப்.18) வெளியிட்ட உத்தரவில், "தனிமைப்படுத்தப்பட்ட நபர் (Quarantine) விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.500 வசூலிக்கப்படும். கரோனா தொற்று உறுதியாகி தனிமையில் சிகிச்சை பெறுவோர் (isolation) விதிகளை மீறி வெளியே சுற்றினால் ரூ.1,000 வசூலிக்கப்படும்.

இந்த அபராதத்தை காவல்துறை ஆய்வாளர்கள், வருவாய்த்துறை தாசில்தார்கள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், நலவழித்துறை மருத்துவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி துறைத்தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளாலும் வசூல் செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இவ்வுத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x