

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் எம்.பி. அ.அன்வர் ராஜா தெரிவித்தார். .
கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் பழனிசாமி வரும் 22-ம் தேதி ராமநாதபுரம் வருகை தரவுள்ளார்.
இதற்காக ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முதல்வரை வரவேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் எம்.பியும், அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளருமான அ.அன்வர் ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் எம்பி அ.அன்வர் ராஜா கூறியதாவது: இருமொழிக் கொள்கை எங்கள் உயிர் நாடி. இந்தித் திணிப்பை எதிர்ப்போம்.
இரு மொழிக் கொள்கைதான் அதிமுகவின் கொள்கை. தமிழகத்திற்கு தமிழ் கண் போன்றது ஆங்கிலம் கண்ணாடி போன்றது.கண்ணும் வேண்டும், கண்ணாடியும் வேண்டும். தமிழ் தாய்ப்பால், ஆங்கிலம் புட்டிப்பால். தாய்ப்பாலும் வேண்டும் புட்டிப்பாலும் வேண்டும்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து என்ன முடிவு எடுக்கிறாரோ, அதைப் பொருத்து தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.