வேதா இல்லம் அரசுடைமை விவகாரம்: தீபா, தீபக் வழக்கு தனி நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை

வேதா இல்லம் அரசுடைமை விவகாரம்: தீபா, தீபக் வழக்கு தனி நீதிபதிகள் விசாரிக்க பரிந்துரை
Updated on
1 min read

வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டதை எதிர்த்த ஜெ.தீபா, தீபக் வழக்குகள் ஏற்கெனவே உள்ள அறக்கட்டளை வழக்குடன் விசாரிக்கப்படாது. தனி நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு மே மாத இறுதியில் வந்தபோது இரு நீதிபதிகள் அமர்வு வழக்கைத் தள்ளுபடி செய்தது.

தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்து, அவரது பெயரில் அறக்கட்டளை உருவாக்கி 8 வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தீபா, தீபக் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதற்கிடையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, வீட்டுச் சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஜெ.தீபக்கும் வழக்குத் தொடர்ந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, 24 ஆயிரம் சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ள இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து நிலம் கையகப்படுத்தும் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, வேதா நிலையம் இல்லத்தை அரசுடைமையாக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து ஜெ.தீபாவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஜெயலலிதா அறக்கட்டளை தொடர்பான வழக்குகள் இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்குகளையும் அந்த அமர்விலேயே பட்டியலிடும்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரிந்துரைத்திருந்தார்.

அதன்படி மூன்று வழக்குகளும், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, அறக்கட்டளை அமைக்க உத்தரவிட்ட வழக்கை மட்டும் தங்கள் அமர்வில் விசாரிப்பதாகத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

அதேசமயம், தீபா, தீபக் ஆகியோரின் வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in