

கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு முதல்வர் பழனிசாமி வரும் செப்.22-ல் ராமநாதபுரம் வருகை தருகிறார்.
தமிழக முதல்வர் கே.பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் செப்.22-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக வரும் 21-ம் தேதி மாலை சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை வருகிறார்.
இரவு மதுரையில் தங்கும் முதல்வர் செப்.22-ம் தேதி காலையில் கார் மூலம் ராமநாதபுரம் வருகிறார். அன்று காலை 9.30 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
பின்னர் பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளார். மதிய உணவை முடித்துக் கொண்டு தூத்துக்குடி செல்கிறார். அன்று மாலை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளார்.
செப்.22 இரவு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தங்கும் முதல்வர் செப்.23 காலை கன்னியாகுமரியிலும், மாலை விருதுநகரிலும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கிறார்.
ஆய்வின்போது நான்கு மாவட்டங்களிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அன்று இரவே சேலம் செல்கிறார்.
முதல்வர் பழனிச்சாமி வருகையை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செய்து வருகிறார்.