Published : 18 Sep 2020 04:53 PM
Last Updated : 18 Sep 2020 04:53 PM

மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குழந்தைகளுக்கு 10-ம் வகுப்பு தனித்தேர்வில் இருந்து முழு விலக்களித்திடுக: தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

தங்கம் தென்னரசு: கோப்புப்படம்

சென்னை

தனித்தேர்வர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுசார் திறன் குறைந்த சிறப்புக் குழந்தைகளாக உள்ள மாணவர்களுக்கு தனித்தேர்வில் இருந்து முழு விலக்களித்து, அவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தங்கம் தென்னரசு இன்று (செப். 18) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருந்த மாணவ, மாணவிகள் நோய்த்தொற்றால் எவ்விதப் பாதிப்புக்கும் உள்ளாகிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நல்லுணர்வோடு, அவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளித்துப் பொதுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவும், திமுகவின் இளைஞரணி மற்றும் மாணவரணியின் முன்னெடுப்புகளாலும், உயர் நீதிமன்றத் தலையீட்டாலும், தமிழ்நாடு அரசு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்து, பள்ளிகளில் பயின்று அவற்றின் வாயிலாகப் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்திருந்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் தேர்ச்சி வழங்குவதாக அறிவித்தது.

தமிழகத்திலும், புதுவையிலும் தனித்தேர்வர்களாகப் பதிவு செய்திருந்த ஏறத்தாழ 34 ஆயிரம் மாணவ, மாணவியருக்கும் சேர்த்தே இக்கொடுந்தொற்றுக் காலத்தில் தேர்ச்சி வழங்கிட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தாலும், தமிழக அரசு அவற்றைப் புறந்தள்ளி, தனித்தேர்வர்களுக்கான தனித்தேர்வு வரும் 21-ம் தேதி அன்று நடைபெறுவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், தனித்தேர்வர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுசார் திறன் குறைந்த சிறப்புக் குழந்தைகளாக உள்ள மாணவர்களுக்கு மட்டுமாவது தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் எழுப்பப்பட்டு, இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடமும் முறையிடப்பட்டது.

ஆனால், மனிதாபிமானத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுமே கண்டிப்பாகத் தேர்வு எழுத வேண்டுமென அரசின் சார்பில் தெரிவித்திருப்பது, ஈர நெஞ்சம் படைத்த எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

பள்ளிகளும், விடுதிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புக் குழந்தைகளாக இருப்போர், தங்களின் இருப்பிடங்களில் இருந்து வெகு தூரம் பயணித்துத் தேர்வு மையங்களுக்கு வருவதும், அங்குள்ள கழிப்பறை போன்றவற்றைப் பயன்படுத்துவதும் மிகக் கடினமானது.

இம்மாணவர்கள் தொடர்ந்து தேர்வு நேரத்தில் முகக்கவசம் போன்றவற்றை அணிவதும் அவர்களால் இயலாத ஒன்றாகும். இது நோய்த்தொற்றுக்கு எளிதில் இம்மாணவர்களை இலக்காக்கிவிடும் சூழலை உருவாக்கக் கூடும்.

எனவே, தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இம்மாணவர்களின் நிலையைச் சிறப்பினமாகக் கருதி, தனித்தேர்வில் இருந்து முழு விலக்களித்து அவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x