Published : 18 Sep 2020 04:34 PM
Last Updated : 18 Sep 2020 04:34 PM

அரசு தொடக்கப் பள்ளிக்கென தனிச் செயலி; 550-ஐத் தாண்டிய மாணவர் எண்ணிக்கை: ஈர்க்கும் இடைமலைப்பட்டி புதூர் பள்ளி

பள்ளி மாண்வர்களில் ஒரு பகுதி

5-ம் வகுப்பு வரையான பள்ளிக்கு 13 வகுப்புகள், வகுப்புக்கொன்றாக 13 தொலைக்காட்சிகள், 13 ஆசிரியர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் போர்டுகள், வகுப்புக்குத் தலா 5 என 65 டேப்லட்டுகள், ஒவ்வொரு வகுப்பிலும் 8 மின்விசிறிகள், ஆர்.ஓ. தண்ணீர் சுத்திகரிப்பான், 13 கழிப்பறைகள், 13 வகுப்புகளுக்கும் தனித்தனி வாட்ஸ் அப் குழு, யோகா, சிலம்பம், கராத்தே, செஸ், கையெழுத்துப் பயிற்சி எனத் திருச்சி அருகே உள்ளே மணிகண்டம் ஒன்றியம் இடைமலைப்பட்டி புதூர் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளும் கற்பித்தல் முறைகளும் பாடத்திட்டம் சாராக் கூடுதல் பயிற்சிகளும் பார்ப்பவர்களை மிரள வைக்கின்றன.

சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளிகளில் இருந்து சேர்ந்த குழந்தைகள் உட்படப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை 554 மாணவர்கள் படிக்கின்றனர். 1-ம் வகுப்பில் மட்டும் 116 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

தற்போது பள்ளி மேம்பாட்டுக்காகவும் பெற்றோர்களுடன் இணைந்திருக்கவும் பள்ளிக்கெனத் தனிச் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னெடுப்பைத் தொடங்கிய இடைநிலை ஆசிரியர் புஷ்பலதா இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் விரிவாகப் பேசினார்.

''PUP SCHOOL TRICHY செயலியின் மூலம் ஆசிரியர்கள், தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வசதி உள்ள கைப்பேசி வழியாக வீடியோ, ஆடியோ, பிடிஎஃப் பாடங்களை அனுப்ப முடியும். இணைய வசதி இல்லாத கைப்பேசிகளுக்குக் குறுஞ்செய்தியாகவும், ஒலிச் செய்தியாகவும் அனுப்பி, மாணவர்களை வீட்டிலிருந்தே கல்வி கற்கச் செய்ய முடியும்.

பள்ளி திறந்தபிறகு செயலியின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு வருவதையும் வராமல் இருப்பதையும் குறுஞ்செய்தி மூலமாகவே பெற்றோர்கள் அறிய முடியும். விடுப்பு தேவைப்பட்டால் செயலி மூலமாகவே பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கலாம். தினசரி பாட நேர அட்டவணை, வீட்டுப் பாடங்கள், முக்கிய நிகழ்வுகள், பள்ளி குறித்த அறிவிப்புகள், புகைப்படங்கள் அனைத்தையும் செயலி மூலமாகவே பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண்களும் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

அதேபோல பேருந்தில் வரும் மாணவர்களின் பெற்றோர், ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளும் வசதியும் இதில் உண்டு. பள்ளியின் ஆண்டு அட்டவணை (Yearly calendar), மதிப்பீட்டு அட்டை, மாணவர்களின் சான்றிதழ்கள் ஆகியவையும் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பள்ளி, செயலி குறித்த கருத்துகளையும் செயலி மூலமாகவே பெற்றோர்கள் பகிர்ந்துகொள்ளலாம். ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 20 மாணவர்களின் பெற்றோர், செயலியைத் தரவிறக்கம் செய்து, பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்'' என்கிறார் ஆசிரியர் புஷ்பலதா.

செயலியை உருவாக்கியதற்கான காரணத்தைக் கூறுபவர், பள்ளியின் மற்ற சிறப்புகளையும் நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.

''தொடக்கப் பள்ளிக்கெனத் தனியாக ஒரு செயலியைத் தொடங்க வேண்டும். அதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அனைவரும் தொடர்ந்து இணைப்பில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய நெடுநாள் கனவு. அதை இப்போது நிறைவேற்றி உள்ளோம். பள்ளியின் செயல்பாடுகளைப் பார்த்து தனியார் நிறுவனம் ஒன்று, செயலியை இலவசமாகவே உருவாக்கிக் கொடுத்துள்ளது.

இங்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கற்பிக்கப்பட்டாலும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் இங்கே செய்திருக்கிறோம். ஒவ்வொரு மாணவரின் தனித்திறனையும் கண்டறிந்து அவற்றை வளர்க்க, சிறப்புப் பயிற்சிகளை அளிக்கிறோம். மாணவர்களுக்கு முகநூல் நண்பர்கள் உதவியுடன் வண்ணச் சீருடைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளோம்.

தமிழ், ஆங்கில வழிக் கல்வி என இரண்டிலும் கற்பித்து வருகிறோம். சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இருந்து இங்கே கொண்டுவந்து 2 முதல் 5-ம் வகுப்பு வரை குழந்தைகளைச் சேர்க்கின்றனர். எங்கள் பள்ளியில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தில் பள்ளி ஆண்டுவிழா, சீர்வரிசை வழங்கும் விழா, மாணவர் சேர்க்கை என முப்பெரும் விழா நடத்துவோம். அப்போதே மாணவர் சேர்க்கை நடந்துவிடும்.

மாணவர்களுடன் ஆசிரியர் புஷ்பலதா

முகநூல் மூலமாக மட்டுமே இதுவரை ரூ.8 லட்சம் நிதியுதவி கிடைத்துள்ளது. அதைப் பள்ளி வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வருகிறோம். முகநூல் வாயிலாகவே மிகப்பெரிய ஆளுமைகளைப் பள்ளிகளுக்கு அழைத்துவந்து பேசவைத்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம். கரோனா காலத்தில், 'துல்கல்' என்ற அமைப்பு சார்பில் 2 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு பெரிய வெற்றிக்குக் காரணம் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களே. தலைமை ஆசிரியர் ஜெயந்தி, வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். அரசுப் பள்ளியின் மாண்பைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து ஆசிரியர்களும் செயல்பட்டு வருகிறோம்'' என்றார் ஆசிரியர் புஷ்பலதா.

- க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x