

கோவிட்-19 காலகட்டத்தில் பணியாளர்கள் மற்றும் பணி அமைவிட பாதுகாப்பில் மிகச்சிறப்பான செயல்பாட்டிற்காக இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளுக்கான விருதுகளை அறிவிக்கும் CAHO அமைப்பு ஓமந்தூரார் மருத்துவமனை, வேலூர் சிஎம்சி மருத்துவமனைகளை தேர்வு செய்துள்ளது.
கரோனா தொற்று ஏற்பட்டு தமிழகம் முழுவதும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் பொறுப்பில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக பங்காற்றி வருகின்றன. குறிப்பாக சென்னையில் கரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் முதன்முதலில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து இங்கு சிறப்பான தனிமைப்படுத்துதலுடன் கூடிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்களின் சிறப்பான சேவை, சரியான மருத்துவ உபகரணங்கள், செவிலியரின் கனிவான அணுமுறை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையுடன் கூடிய உளவியல் ஆலோசனைகள், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பு என அனைத்திலும் அரசு மருத்துவமனைகள் சிறப்பான பணியை செய்து வருகின்றன. எண்ணற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். இத்தகைய சிறப்பான அர்பணிப்புமிக்க மருத்துவமனைகளில் ஓமந்தூரார் மருத்துவமனை குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது.
கோவிட் சிகிச்சையில் சிறப்பாக தேர்வு செய்யப்படும் இவ்விருதுகளுக்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவமனைகளிலிருந்து 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் CAHO ஆல் பெறப்பட்டிருந்தன.
* இதில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை மற்றும் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (சிஎம்சி) ஆகிய மருத்துவமனைகள் முதன்மையான விருதுகளைப் பெற்றுள்ளன.
* பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதற்கு மருத்துவமனைகள் எடுத்த முயற்சிகள், செய்த புத்தாக்கங்கள் மீதான தகவல் தொகுப்பை வெளியிடவும் CAHO திட்டமிட்டிருக்கிறது.
சுகாதார பராமரிப்பு சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது மீது தன்னை அர்ப்பணித்திருக்கின்ற இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான CAHO, பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பில் நேர்த்திக்காக மருத்துவமனைகளுக்கு 2020 விருதுகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களை அறிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று சூழலில், பணியாளர் / பணி அமைவிட பாதுகாப்பிற்காக மருத்துவமனைகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடிப்படையில் இந்த வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிஎம்ஆர் –ன் NIOH அமைப்பு மற்றும் HSE தொழில்முறை பணியாளர்களின் உலகளாவிய சங்கம் ஆகியவற்றோடு இணைந்து CAHO நடத்திய இந்நிகழ்வில் வெளிநாடுகளிலிருந்து 7 மருத்துவமனைகள் உட்பட, 100-க்கும் அதிகமான மருத்துவமனைகள் பங்கேற்றன.
மிகப்பெரிய மருத்துவமனைகள் வகையினத்தில் சிஎம்சி வேலூர் (தமிழ்நாடு) மற்றும் அம்ரிதா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (கொச்சி) ஆகியவை முதல் மற்றும் இரண்டாவது பரிசுகளை முறையே வென்றன. ராமய்யா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (பெங்களுரு) மற்றும் எனிபோயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை (மங்களூர்) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
பெரிய மருத்துவமனைகள் வகையினத்தில் (300-600 படுக்கை வசதிகள்) ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி (சென்னை) மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை, மொஹாலி (பஞ்சாப்) முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றன. இவ்வகையினத்தில் பாய் ஜெர்பாய் வாடியா குழந்தைகள் மருத்துவமனை (மும்பை) மற்றும் தவாம் மருத்துவமனை (அபுதாபி), ஊக்குவிப்பு விருதுகளை வென்றன.
நடுத்தர அளவு மருத்துவமனைகள் வகையினத்தில் (100-300 படுக்கைகள்) ஆஸ்டர் சனாத் மருத்துவமனை (ரியாத்) மற்றும் விபத்து மற்றும் அவசரநிலை சிகிச்சை மையம் (பெங்களுரு மருத்துவக்கல்லூரி) ஆகியவை முறையே முதல் இரண்டு பரிசுகளை வென்ற நிலையில் ஆனந்த் சர்ஜிக்கல் ஹாஸ்பிட்டல் (அகமதாபாத் மற்றும் கோஹினூர் ஹாஸ்பிட்டல்ஸ் (மும்பை) ஊக்குவிப்பு விருதுகளைப் பெற்றன.
சிறிய மருத்துவமனைகள் வகையினத்தில் (100 படுக்கைகளுக்கும் குறைவான) கொலம்பியா ஏசியா ஹாஸ்பிட்டல் ஹெப்பால் (பெங்களுரு) முதல் பரிசையும் தர்மகிரி செயிண்ட் ஜோசப் ஆஸ்பிட்டல் (கோழிக்கோடு, கேரளா) இரண்டாம் பரிசையும் பெற்றன. ஓக்ஹார்ட் ஹாஸ்பிட்டல் (தானே) மற்றும் ARMC AEGiS மருத்துவமனை (மலப்புரம், கேரளா) ஆகியவற்றிற்கு ஊக்குவிப்பு விருதுகள் தரப்பட்டன.
CAHO அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் அகர்வால் பேசுகையில், “மருத்துவமனைகளின் கோவிட் வார்டுகளில் பணியாற்றுபவர்களில் 11%-க்கும் அதிகமானவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பதாக இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களின் புள்ளிவிவரத் தரவுகள் சுட்டிகாட்டுகின்றன. தங்களது பணியாளர்களை பாதுகாப்பது மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகவும் சிரமமான, மனஅழுத்தம் தருகின்ற காலகட்டமாக இருந்து வருகிறது.
குறைவான ஆதாரவளங்கள் இருந்தபோதிலும் கோவிட் – 19 தொற்றிலிருந்து தங்கள் பணியாளர்களை பாதுகாக்க பல மருத்துவமனைகள், பல புத்தாக்கங்களை மற்றும் அறிவார்ந்த நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருக்கின்றன. பாதுகாப்பான, மனஅழுத்தம் இல்லாத பணிச்சூழலை தங்கள் பணியாளர்களுக்கு வழங்க சிறந்த முயற்சிகளை எடுக்கின்ற மருத்துவமனைகளை அங்கீகரித்து கௌரவிப்பதே இவ்விருதுகளின் நோக்கம்” என்று தெரிவித்தார்.
CAHO அமைப்பின் தலைமை செயலாளர் டாக்டர். லல்லு ஜோசப், விருதுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் முறையியல் பற்றி பேசுகையில், “பல புதுமையான, சிறப்பான நடவடிக்கைகளை பல மருத்துவமனைகள் எடுத்துள்ளன என்பதை இந்த விண்ணப்பங்களிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். கேர் டேக்கர் ரோபோ, புளுடூத் ஸ்டெதஸ்கோப், N95 முககவசங்களை தூய்மையாக்கி மீண்டும் பயன்படுத்தல்.
ஊட்டச்சத்தை உயர்த்தி நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் உணவுகளை பணியாளர்களுக்கு வழங்குதல், செயலிகள் வழியாக பணியாளர்களுக்கு மனநல ஆலோசனை, அறுவைசிகிச்சை அரங்குகளில் மருத்துவ பணியாளர்களுக்கு தூய்மையான, அழுத்தப்பட்ட காற்றை பாதுகாப்பாக வழங்க தஞ்சாவூர் ஏர் பேரியர் உத்தி மற்றும் யுவி தூய்மை ஆகியவை மருத்துவமனைகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுள் சிலவாகும்,” என்று விளக்கமளித்தார்.
சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள், கோவிட் மற்றும் கோவிட் அல்லாத வார்டுகளில் தொற்று ஏற்படாத பணியாளர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகள் எடுத்த பணியிட பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் விருது மதிப்பீட்டிற்காக கவனத்தில் கொள்ளப்பட்ட அம்சங்களாகும்.