

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் 1650 குளங்கள் நிரம்பியுள்ளன. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழையால் குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக 469 கனஅடி தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதனால் அணையில் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 419 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதைப்போலவே 77 அடி கொள்ளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 65.30 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு 295 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. மழையை பயன்படுத்தி அணை நீரை சேமிக்கும் வகையில் பெருஞ்சாணி அணை தற்போது அடைக்கப்பட்டுள்ளது. சிற்றாறு 1 அணைக்கு 100 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அதே அளவு தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோரியில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் இந்த மாத இறுதிக்குள் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழையால் ஒருபுறம் நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தாலும், கன்னிப்பூ நெல் அறுவடை பணி மும்முரமடையும் தருவாயில் விவசாயிகள் பேரிழப்பை சந்தித்து வருகின்றனர். 6500 ஹெக்டேர் நெல் விவசாயம் உள்ள நிலையில், இன்னும் 20 சதவீத வயல்களிலே அறுவடை பணிகள் முடியவில்லை.
இதனால் பெரும்பாலான வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து முளைத்து வருகின்றன. இதனால் நல்ல மகசூல் பெற்றிருந்தாலும் நெல்லை உரிய விலைக்கு விற்று பணமாக்க முடியவில்லையை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அவ்வப்போது அடித்து வரும் வெயிலை பயன்படுத்தி அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
மழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்ஆதார கட்டுப்பாட்டில் உள்ள 2040 குளங்களில் 1650 குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. இதனால் நகர, கிராமப்புற மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் ஆழ்துளை கிணறுகளிலும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்து வருகிறது. குளங்கள் நிரம்பியதால் குளத்து பாசன வயல்பரப்புகளிலும் அடுத்த கும்பப்பூ சாகுபடியை தொடங்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அடிக்கடி ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வந்த நிலையில், அனைத்து காலங்களிலும் குடிநீர் கிடைக்கும் வகையில் புத்தன்அணை திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் கோடை காலமான ஏப்ரல், மே மாதத்திற்குள் புத்தன்அணை குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நாகர்கோவில் நகர பகுதிகளில் நடைமுறைக்கு வரவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் நாகர்கோவில் நகரின் தற்போதைய குடிநீர் ஆதாரமான முக்கடல் அணையும் தொடர் மழையால் வேகமாக நீர்மட்டத்தை எட்டி வருகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணை நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ளது.
முக்கடலை சுற்றியுள்ள மலையோரங்களில் இதே நிலையில் மழை தொடர்ந்தால் இரு வாரங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாகர்கோவில் நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.