Published : 18 Sep 2020 03:34 PM
Last Updated : 18 Sep 2020 03:34 PM

நீலகிரியில் 'நோ சிக்னல்': ரேஷன் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் நடைமுறை சாத்தியப்படுமா?

பிரதிநிதித்துவப் படம்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நியாயவிலை கடைகளில் நுகர்வோர் பொருட்களை பெற பயோமெட்ரிக் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்காக வழங்கப்பட்டுள்ள கருவிகளில் கோளாறு மற்றும் தொலைத்தொடர்பு சிக்னல் முறையாக இல்லாதது போன்ற காரணங்களால் கடைக்காரர்கள் பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற முடியாமலும் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசின் புதிய திட்டத்தின்படி, குடும்ப அட்டைகளுக்கு நியாய விலை பொருட்களை அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கடைகளுக்கு நேரில் சென்று பெற முடியும்.

இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவியில் கைரேகையை பதிவு செய்து பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கருவியில் கைரேகை பதிவாகிய உடன் ஸ்மார்ட் கார்டை இணைக்கும் போது குறிப்பிட்ட நபருக்கான தளம் திறக்கப்பட்டு, அதில் தேவையான பொருட்களை பதிவு செய்து கடைக்காரர் வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இணையதள வசதி இருக்க வேண்டும். தொலைத்தொடர்பு சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும்.

மலைப்பகுதியில் தொடர்பில் சிக்கல்

மலைப் பகுதியான நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு சிக்னல் கிடைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற நகர் பகுதிகளிலேயே சிக்னல் கிடைப்பதில் சிக்கல் உள்ள நிலையில், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு சிக்னல் கிடைப்பது இல்லை.

இந்நிலையில், இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் புதிய திட்டத்தின் மூலம் பொருட்களை வழங்க முடியாமல் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

பொருட்கள் வாங்க வரும் நுகர்வோர் கடந்த இரண்டு- மூன்று நாட்களாக தினசரி கடைக்கு வந்து பொருட்கள் பெற முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும், பல நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்ட இயந்திரங்கள் முறையாக இயங்காத காரணத்தாலும், அரிசி உட்பட பொருட்கள் போதிய இருப்பு இருந்தும் நுகர்வோருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இது போன்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் போது அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்த பின்னர் திட்டத்தை செயல்படுத்தினால் பொதுமக்கள் முழுமையாக பலன்களைப் பெற முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்கள் புலம்பல்

இந்நிலையில், தொடர்பில் சிக்கல் உள்ள நிலையில், வயதானவர்களின் கைரேகை பதிவாவதில்லை. மேலும், கிராமப்புறங்களில் ஆதார் அட்டை, தொலைபேசியை கொண்டு வருவதில்லை. அதிலிருந்து ஓடிபி அவர்களால் கூற முடிவதில்லை. இதனால், ஒரு அட்டைதாரருக்கே 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் ஆகிறது. இதனால், தங்களுக்கு தான் பணி சுமை அதிகரிக்கிறது என ஊழியர்கள் புலம்புகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, கருவிகளில் கை ரேகை பதிவு செய்வதால், கரோனா வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக நுகர்வோர் அமைப்பினர் அச்சப்படுகின்றனர். மேலும், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை இந்த நடைமுறையை நிறுத்தி வைக்க வேண்டும் என, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

சு. சிவசுப்பிரமணியம்

அவர் கூறும் போது, "நியாய விலை கடைகளில் கை ரேகை பதித்து உணவு பொருட்களை வாங்கி செல்லும் நடைமுறை இம்மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கரோனா காலம் என்பதாலும், பலருக்குக் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், கருவியில் விரல்கள் தொடும் போது தொற்று அதிகரிக்கும் நிலை உள்ளது" என்றார்.

இது குறித்து திருச்சி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சேகரன், "தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குத் தகவல் அனுப்பி இம்முறை செயல்படுத்தக் கூடாது என கேட்டுள்ளேன். அதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது.

இதை அடிப்படையாக கொண்டு ரேஷன் கடைகளில் கை விரல் பதித்து, உணவு பொருட்கள் வாங்கும் முறையை அரசு தவிர்க்க வேண்டும்" என்றார்.

இது குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், "அனைத்து ரேஷன் கடைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவர் கை ரேகை பதித்த உடன், கருவியை கடை ஊழியர் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம் மலைப்பகுதி என்பதால் சிக்னல் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பேசி நிவர்த்தி செய்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x