

மதுரையில் 400-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணி நியமன நிலுவைப் பட்டியல் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார்.
மேலும், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் ஏராளமான சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடம் காலியாக இருந்தது. சுமார் 1,500 பணியிடங்களை நிரப்ப கடந்த 2017-ம் ஆண்டில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.
இதற்கிடையே இந்தப் பணியிடங்களில் தாங்கள் சொல்பவர்களைத்தான் நிரப்ப வேண்டும் என ஆளுங்கட்சியினர் முயற்சித்து,
அதிகாரிகளுக்கு நெருக்கடி தந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஒரு பணியிடத்திற்கு ரூ.4 லட்சம்வரை பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. யாருடைய சிபாரிசின் அடிப்படையில் நியமிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அப்போது மதுரை ஆட்சியராக இருந்த எஸ்.நடராஜனை மாற்றி, புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜனை தேர்தல் ஆணையம் நியமித்தது. மக்களவை தேர்தல் நேரம் என்பதால், தேர்தல் ஆணைய உத்தரவின்படி ஆட்சியர் மாற்றப்பட்டார்.
தேர்தல் முடிந்ததும் கடந்த மே 27-ம் தேதிக்குள் நாகராஜன் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது நடக்காத நிலையில், மனு நீதிநாள் முகாமில் பலரும் மனுக்களை அளித்தனர். இதில் பல மனுக்கள் அங்கன்வாடி பணியிடம் தொடர்பானதாக இருந்தது.
இது குறித்து ஆட்சியர் விசாரித்தபோதுதான் 2 ஆண்டுகளாக பணியிடங்கள் நிரப்பப்படாதது தெரிந்தது. உடனே வளர்ச்சிப் பிரிவு, சத்துணவுப் பிரிவு அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
ஏற்கெனவே நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானோர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கோப்பு தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊனமுற்றோர், கணவனை இழந்தோர் என பல்வேறு நிலையில் கஷ்டப்படும் நிலையிலுள்ள தகுதியானவர்களைத் தேர்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து 1,500 பேரும் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேரும் உத்தரவு ஆட்சியரின் நேரடிப் பார்வையில் தயாரானது.
ஊராட்சி ஒன்றியம் வாரியாக தேர்வானோரின் வீடுகளுக்கே அதிகாரிகள் நேரடியாகச் சென்று உத்தரவுகளை அளிக்கவும், உடனே பணியில் சேர்ந்ததாக கையெழுத்து பெற்று 2019 ஜூலை 3 இரவுக்குள் தன்னிடம் ஒப்பபடைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதிகாரிகள் உத்தரவுகளுடன் கிராமங்கள்தோறும் சென்று தகுதியானவர்களிடம் வழங்கினர்.
அதேபோல், சத்துணவு அமைப்பாளர், சமையலர் காலிப் பணியிடங்களுக்கான பட்டியலையும் அவர் தயார் செய்தார். சுமார் 400-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்து பட்டியலைத் தயாராக வைத்திருந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டார்.
ஓராண்டுக்கு மேலாக அவர் தயார் செய்த அந்தப் பட்டியல் நிலுவையில் இருந்த நிலையில் அதை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் அறிவித்துள்ளார்.
மேலும், சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.