

புதுச்சேரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளது. இதுவரை செய்த செலவு விவரத்தை வெள்ளை அறிக்கையாக முதல்வர் நாராயணசாமி வெளியிடத் தயாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கான நிதி விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ இன்று (செப். 18) வெளியிட்டுள்ள அறிக்கை:
"கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பிற மாநிலங்களில் மிகவும் சத்தான ஊட்டச்சத்து மிகுந்ததாக இருக்கிறது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்படும் உணவு சாதாரண ஓட்டல் அளவு சாப்பாடு போலத்தான் வழங்கப்படுகிறது. தரமற்ற இந்தச் சாப்பாட்டுக்கு புதுச்சேரி மாநில அரசு ஒரு நாளைக்கு 325 ரூபாய் கொடுக்கிறது. சாப்பாட்டுக்காக இத்தனை பெரிய தொகை வாங்கிக் கொண்டிருக்கும் உணவுத் தயாரிப்பாளர், தற்போது காங்கிரஸ் அரசில் ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும் நபர்தான்.
கரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்காக தகுதி வாய்ந்த உணவுத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து முறையாக டெண்டர் ஏதும் பெறப்படவில்லை. காங்கிரஸ் கட்சியில் அதிகாரத்தில் உள்ளவர் தனக்குத்தானே அந்த டெண்டரை எடுத்துக் கொண்டுவிட்டார்.
அரசுப் பணியில் உள்ளவர்கள் தங்கள் பெயரிலோ தங்களைச் சார்ந்தவர்கள் பெயரிலோ, பினாமி பெயரிலோ லாபம் ஈட்டும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது சட்டப்படி குற்றமாகும்.
புகழ்பெற்ற அரசு மினரல் வாட்டர் நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு தற்போது காங்கிரஸ் பிரமுகர் நடத்தும் மினரல் வாட்டர் நிறுவனத்தில் இருந்து பல லட்சம் ரூபாய்க்கு மினரல் வாட்டரை புதுச்சேரி அரசு வாங்கிக் குவிக்கிறது.
எந்த ஒரு சிறிய வேலையையும் செய்ய விடாமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுக்கிறார் என்று காங்கிரஸார் குற்றம் சாட்டி வருகின்றனர். அவர்கள் லாபம் பெறும் வேலைகள் மட்டும் தடையில்லாமல் நடப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
கரோனா நிவாரணப் பணிகளுக்காக புதுச்சேரி அரசு என்னென்ன பணிகள் செய்தது என்பது தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கையாக வெளியிடுவாரா?
கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்த முதல்வர், இதுவரை எத்தனை பேருக்கு இந்தப் பணத்தை வழங்கியுள்ளார் என பதில் தர வேண்டும்.
புதுச்சேரியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல்கள் தோண்டி எடுக்கப்பட்டு சட்டப்படி விசாரணை நடத்தப்படும்.ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்துள்ளார்.