

அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா இன்று (செப். 18) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
"மாணவர்களின் உயர்கல்வித் தேவையை உணர்ந்து, எம்.ஜி.ஆர். சுயநிதிக் கல்லூரிகளைத் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அனுமதியளித்து, உயர்கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அந்தப் புரட்சியில் உதித்த ஒன்றுதான் சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.
பல்கலைக்கழகங்கள் அறிவுலகின் கோயில்கள். இங்கு மாணவர்கள் அறிவின் ஆழத்தை அறிந்துகொள்ள வழிகாட்டப்படுகிறார்கள். இக்கல்விச் சேவையைச் சிறப்பாகச் செய்வதால்தான், இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கில் மாணவர்களைக் கல்வி பயில ஈர்க்கின்றது.
'சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்ற விழிப்புணர்வு உடையவர் எவரோ, அவரே சிறந்த மனிதர்' என்றார், அம்பேத்கர். கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தத்தெடுப்பது, அந்தப் பள்ளிகளுக்கு நவீன உபகரணங்களை வழங்குதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்வது போன்ற பணிகள், சமுதாய முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற இந்த நிறுவனத்தின் உயர்ந்த எண்ணத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கல்விச் சேவையில், இந்த நிறுவனம் இடையறாது ஆற்றி வரும் பணிகளுக்காக, அரசுத்துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து பல அங்கீகாரங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளது என்பதை அறிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் இஸ்ரோ நிறுவனத்துடன் இணைந்து துணைக்கோள் ஒன்றினை விண்ணில் செலுத்திய செயல், இந்தப் பல்கலைக்கழகத்தின் தனித்துவத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
இன்று நடைபெறும் இந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற உள்ள 3,190 இளநிலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெற உள்ள 129 ஆராய்ச்சி அறிஞர்களுக்கும், தங்கப் பதக்கம் பெற உள்ள 20 மாணவர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'அறிவுசார் மனிதவளம் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கு தடையின்றி கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்' என்றார், ஜெயலலிதா. எனவே, தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் முன்னோடி மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும்.
உயர்கல்வித் துறையில் ஜெயலலிதாவால், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.
- அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
- 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 2019-20 ஆம் ஆண்டு வரை அதிக அளவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை தமிழக அரசு உருவாக்கித் தந்துள்ளது.
- 2019-20 ஆம் ஆண்டில் 14 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- 2013-14 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டு வரையில், 21 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- கடந்த 2012-13 ஆம் ஆண்டிலிருந்து 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- இந்த கல்வி நிலையங்கள் நகர மற்றும் கிராம மக்கள் எளிதில் சென்றடையும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
- சென்ற 2011-12 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
- இதனால் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- சமீபத்தில் தேசிய தர நிர்ணயக் கட்டமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உயர் கல்வி தரவரிசைப் பட்டியலில், அகில இந்திய அளவில் உள்ள முதல் 100 பல்கலைக்கழகங்களில், தமிழ்நாட்டைச் சார்ந்த 18 பல்கலைக்கழகங்களும், முதல் 100 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்நாட்டை சார்ந்த 18 பொறியியல் கல்லூரிகளும், முதல் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 32 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கட்டணச் சலுகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, கல்வி ஊக்கத்தொகை, இலவசப் பேருந்து அட்டை மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிக்கும் மாணவர் வரை இலவசக் கல்வி போன்ற முன்னோடி திட்டங்களால் மாணவர்களின் சேர்க்கை விகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது.
- 2020-21ஆம் ஆண்டு உயர் கல்வித்துறை வளர்ச்சிக்காக 5,052 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மாணவர்களின் கல்வி மேம்பட தமிழக அரசு இதுபோன்று பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
- தமிழக அரசு எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக இன்று உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
- சமீபத்தில்கூட புதிய ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் மற்றும் சாய் தனியார் பல்கலைக்கழகங்களின் கட்டிடங்களுக்கு நான் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன். மேலும், விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அமைதியான சூழ்நிலை, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனிதவளம் அதிகமாக உள்ளதால், இன்று பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அதிக அளவில் முன்னுக்கு வருகின்றன. மேலும், தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்ட இரண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்புகளின் மூலம் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
தற்போது, கரோனா தொற்று நோயின் தாக்கத்தால், தொழில் துறையில் நிலவிவரும் மந்த நிலையிலும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பது பட்டப்படிப்பு முடித்து, பணியினைத் தேடவிருக்கும் உங்களுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டும் செய்தி.
சுயமாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும், தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளையும், ஊக்கத்தையும் அளித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, பட்டம் பெற்று வெளியில் வருபவர்கள், சுயதொழில் தொடங்குவதற்கு முனைப்புக் காட்ட வேண்டும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.