

நடிகர் சூர்யா நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லை எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம் கரோனா காலத்தில் நீதிமன்றப் பணியை அறிந்துகொள்ளாமல் சூர்யா விமர்சித்திருப்பது சரியல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடந்து முடிந்தது. இந்தத் தேர்வுக்குத் தயாராகி வந்தபோது அச்சத்தால் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, மாணவர் ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். இது அரசியல் கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் சூர்யா இதுகுறித்துக் காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
" 'நீட் தேர்வு' பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு 'வாழ்த்து' சொல்வதற்குப் பதிலாக 'ஆறுதல்' சொல்வதைப் போன்ற அவலம் எதுவுமில்லை. 'கரோனா தொற்று' போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.
கரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து 'வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது'' என அறிக்கையின் ஒரு பகுதியில் சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொலைக்காட்சியில் பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்குக் கடிதம் எழுதினார். சூர்யா நீதிமன்றம் குறித்துக் குறிப்பிட்டுள்ள வரிகள், நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் வகையில் மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் அறிக்கை நீதிமன்ற அவமதிப்புச் செயல் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும் என்கிற நிலை உருவானது.
''சூர்யாவின் கருத்தில் உள்நோக்கமில்லை. அவர் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து பணியில் அமர்த்தியுள்ளார். அவர் கூறிய கருத்தில் உள்நோக்கம் இல்லை. இதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற வழக்கை எடுத்து வீண் சர்ச்சையில் உயர் நீதிமன்றம் சிக்குவதை விரும்பவில்லை. நீதிமன்றத்தின் மாண்பின் மீதுள்ள அக்கறையால் இதை எழுதுகிறோம்'' என ஓய்வுபெற்ற நீதிபதிகள் கூட்டாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், நீதிபதியின் கடிதம், ஓய்வுபெற்ற நீதிபதிகளின் கடிதம் போன்றவற்றைப் பரிசீலித்த அரசு தலைமை வழக்கறிஞர், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு தேவையில்லை என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் தலைமை நீதிபதி அமர்வு கூறியிருப்பதாவது:
''கரோனா தொற்றுப் பரவும் நேரத்தில் கூட நீதிமன்றங்கள் காணொலி மூலமாகவும், நேரடியாகவும் செயல்பட்டு 42 ஆயிரத்து 233 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
கரோனா காலத்திலும் நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட்டுள்ளன என்பது குறித்து நடிகர் சூர்யா முழுமையாக அறிந்து கொள்ளாமல் விமர்சித்தது தேவையற்றது. பொது விவகாரங்கள் குறித்து தனி நபர் கருத்துத் தெரிவிக்கும்போது, குறிப்பாக நீதிமன்றங்கள், நீதிபதிகள் மற்றும் அவர்களின் பணிகளை விமர்சிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நியாயமான விமர்சனங்கள் நீதிமன்ற அவமதிப்பாகக் கருத முடியாது என்றாலும் கரோனா காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளாத நடிகர் சூர்யாவின் விமர்சனம் என்பது அவசியமில்லாத ஒன்று”.
இவ்வாறு தலைமை நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு அறிவுரைகளைத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, சூர்யா அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.