

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின் மதுரையில் இருந்து கடந்த 2 மாதங்களில் 56,400 பேர் விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு முதன் முதலில் அறிவிக்கப்பட்டபோது மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்பட்ட வெளிநாட்டு விமான சேவையும், சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு அவ்வப்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்தது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், பயணிகளுக்கு காய்ச்சல் இருக் கிறதா என பரிசோதனை செய்த பிறகே விமானம் ஏற அனுமதிக்கப்படுகிறது. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட புதிதில் மதுரை விமான நிலையத்திலிருந்து ஓரிரு விமானங்களே இயக்கப்பட்டன. தற்போது சென்னை-மதுரை இடையே 4 விமானங்கள், மதுரை-மும்பை, மதுரை- டெல்லி, மதுரை-பெங்களூரு இடையே தலா 1 விமானம், மதுரை- ஹைதராபாத் இடையே 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலையில் 22,134 பேர் பயணம் செய்தனர். ஆகஸ்டில் 34,266 பேர் பயணம் செய்துள்ளனர்.
இது குறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக மதுரையில் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் 2 மாதங்களில் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்போது பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மதுரை விமான நிலையத்தில் கூடுதல் விமானங்களை பார்க்கிங் செய்யும் வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இப்பணி விரைவில் நிறைவடையும். அதன்பின் மதுரைக்கான விமான சேவை அதிகரிக்கும் என்றார்.