

விவசாயக் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
விவசாயக் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். 2019-2020-ம் ஆண்டுக்கான விவசாய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
2016 முதல் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்க வங்கிகளிலும் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும்.
விதை மற்றும் உரம், யூரியா போன்ற விவசாய இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி வேளாண் துறை மூலம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
முன்னாள் எம்எல்ஏ சோ. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் வி. பாலமுருகன், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் அ. லெனின், மாவட்ட துணைத்தலைவர் சிவராம், ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் க. தமிழரசன், ஏஐடியூசி பஞ்சாலை சங்கத் தலைவர் குருசாமி, பெருமாள்பட்டி ஊராட்சித் தலைவர் முரளிதரன், விவசாய சங்க எட்டயபுரம் தாலுகா தலைவர் ரவீந்திரன் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.