Last Updated : 18 Sep, 2020 01:16 PM

 

Published : 18 Sep 2020 01:16 PM
Last Updated : 18 Sep 2020 01:16 PM

மீன் குத்தகைக்காகக் கண்மாய் ஏலம்; சோ.தர்மனின் முகநூல் பதிவைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

கண்மாய்களுக்கும், உள்ளூர் மக்களுக்குமான உறவு எப்படிப் பாழாகி இருக்கிறது என்று எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய முகநூல் பதிவை முழுமையாகச் சுட்டிக்காட்டி, கண்மாய் ஏலம் குறித்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தேனி மாவட்டம் போடி தாலுக்கா, அம்மாபட்டி கிராமத்தில் உள்ள மீனாட்சியம்மன் கண்மாயைத் தமிழக மீன்வளத் துறையானது மீன் பாசி வளர்ப்புக்கெனக் குத்தகைக்குக் கொடுத்திருந்தது. வழக்கமாக சுமார் 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போகும் அந்தக் கண்மாயை, 3 ஆண்டுகளுக்கு வெறுமனே 19.44 லட்ச ரூபாய்க்கு மட்டுமே கொடுத்திருப்பதாகவும், முறைகேடான இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.மணி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். குத்தகைதாரர்கள் நடந்துகொள்ளும் முறை குறித்தும் அதில் அவர் புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மீன்வளத் துறையின் குத்தகை அனுமதியை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், எழுத்தாளர் சோ.தர்மனின் சமீபத்திய முகநூல் பதிவு ஒன்றை முழுமையாக மேற்கோள் காட்டியுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

எழுத்தாளர் சோ.தர்மனின் முகநூல் பதிவின் சுருக்கம்

"ஒரு நாள் நான் கண்மாய்க் கரையில் அமர்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கிடை மாடுகளை மேய்க்கிற ஒருவர் வந்து, ரொம்ப பவ்யமாக, 'அய்யா எங்கள் மாடுகளுக்கு இந்தக் கண்மாயில் தண்ணீர் காட்ட தாங்கள் அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டார்.

'நாங்க கமுதியில் இருந்து வருகிறோம். எல்லாக் கண்மாய்களையும் அரசு குத்தகைக்கு விட்டுருச்சு. குத்தகைதாரர்கள் மாடுகளைத் தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. கல்லால் எறிந்து விரட்டுகிறார்கள்' என்று விளக்கமும் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை.

அவர் மேலும் சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். 'சம்சாரிகள் தங்களது பம்புசெட் கிணறுகளில்கூட மாடுகள் தண்ணீர் குடிப்பதைக் தடுப்பதில்லை. ஆனால், குத்தகைதாரர்கள் கண்மாய்களில் கூடத் தண்ணீர் குடிக்க விடுவதில்லை. மேலும், கண்மாய்களில் பறவைகளைக் கூடு கட்டக்கூட விடாமல் வெடிவைத்து விரட்டுகிறார்கள்' என்றும் சொன்னார். நான் மவுனித்துப் போனேன்.

கண்மாய்களைக் குத்தகை என்ற பெயரில் ஃபாக்டரிகளாக மாற்றிவிட்டது அரசு. பல்வேறு துறைகளின் தலையீட்டால் ஊர் மக்களுக்கும் கண்மாய்களுக்குமான உறவை நாசப்படுத்திவிட்டது அரசு. அப்படியானால் இந்தக் கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள், தெப்பக்குளங்கள், நீராவிகளை நம் முன்னோர்கள் யாருக்காக உருவாக்கினார்கள்?

சைபீரியாவில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் பறந்துவந்து, தமிழ்நாட்டிற்கு வருகிற ஒரு கொக்கை இங்கே கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யவிடாமலும், மீன்பிடித்துப் பசியாற விடாமலும் நாம் விரட்டினால் அவை நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? பட்சி தோஷமும், வாயில்லா ஜீவன்களின் வயிற்றெரிச்சலும் இந்த ஆட்சியாளர்களைச் சுட்டெரிக்கும்".

இவ்வாறு சோ.தர்மன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதுகுறித்து எழுத்தாளர் சோ.தர்மனிடம் கேட்டபோது, "இன்று காலையில் சில வழக்கறிஞர்கள் எனக்கு போன் போட்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அதன் பிறகுதான் எனக்கு விஷயமே தெரியும். தீர்ப்பு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிறதாம். அந்தத் தீர்ப்பின் நகலையும் எனக்கு அனுப்பி வைத்தார்கள். 26 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் என்னுடைய முகநூல் பதிவை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார் மாண்புமிகு நீதியரசர்.

‘சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் பதிவைப் பாருங்கள்’ என்ற வாசகமும் அந்தத் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கிறது. கூடவே, 'கண்மாய் போன்ற நீர்நிலைகளை ஏலம் விடும் நடைமுறைகளை மாற்றுங்கள். நுகர்வோருக்கு உள்ள உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்' என்றும் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு என்பது இந்திய அரசின் ஆவணங்களில் ஒன்று. அது காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படுவதுடன், பல்வேறு சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்களால் வாசிக்கப்படும். மேற்கோள் காட்டப்படும். அந்தத் தீர்ப்பில் என்னுடைய பெயரும், கருத்தும் இடம்பெற்றிருப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறேன். நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய வழக்கறிர்கள், நீதிபதிகள் பலர் கடுமையான வேலை நெருக்கடிக்கு மத்தியிலும் சமகாலப் படைப்புகளையும், படைப்பாளிகளின் கருத்துகளையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பது உள்ளபடியே மகிழ்ச்சி தருகிறது. அந்த முகநூல் பதிவில் வலியுறுத்துகிற கருத்தைத்தான் என்னுடைய 'சூல்' நாவலிலும் வலியுறுத்தியிருந்தேன்.

ஒவ்வொரு நீர்நிலைகளிலும் அந்தந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையில் அரசும் தற்போதிருக்கிற ஏல நடைமுறைகளை மாற்ற வேண்டும் என்று இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று சோ.தர்மன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x