இந்திய பி.பீ.ஓ. ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்குக; மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

இந்திய பி.பீ.ஓ. ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (செப். 18) மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு எழுதிய கடிதம்:

"இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் வணிக செயல்முறை அவுட்சோர்சிங் (BPO) மற்றும் ஐ.டி.இ.எஸ். (ITES) ஆகிய துறைகளை ஊக்குவிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும், இந்திய பி.பீ.ஓ ஊக்குவிப்புத் திட்டத்தைத் தொடங்கியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். இதன்படி, ரூ.493 கோடி மதிப்பீட்டில் இந்தியா முழுவதும் 48 ஆயிரத்து 300 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: கோப்புப்படம்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: கோப்புப்படம்

இத்திட்டம் தமிழகத்தில் மிகவும் வெற்றிகரமானதாக விளங்குகிறது. சென்னை வரம்பில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில் (STPI) 7,705 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 100 இடங்கள் புதுச்சேரிக்கு வழங்கப்பட்டவையாகும். இதன்மூலம், நேரடியாக 8,587 பேரும், மறைமுகமாக 16 ஆயிரத்து 774 பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். செயல்பாட்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் வெற்றி விகிதம் 93 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் 51 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான தமிழக அரசின் நோக்கத்திற்குத் துணைபுரிவதாக உள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின் வெற்றியைக் கருத்தில் கொண்டு, பி.பீ.ஓ ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு 10 ஆயிரம் இடங்களை ஒதுக்க வேண்டும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in