

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை எந்த நிலையில் உள்ளது? எவ்வளவு நாட்கள் கூடுதலாக தேவைப்படும்? என்பது தொடர்பாக விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கண்ணன்குளத்தைச் சேர்ந்த முருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
அதில்,"சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜூலை 1-ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் மீதான தட்டச்சு செய்யப்பட்ட புகாரில் கையெழுத்திடுமாறு உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கட்டாயபடுத்தியதன் பெயரில், உயர் அதிகாரி கூறுவதை ஏற்க வேண்டும் என்ற காரணத்தின் காரணமாக நானும் கையெழுத்திட்டேன்.
அதைத்தவிர வேறு எந்தச் செயலிலும் நான் ஈடுபடவில்லை. வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவரிடம் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
எனக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன்.
ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார். இதேபோல காவலர்கள் தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன், முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், கைது செய்யப்பட்டு செப்டம்பர் 24-ம் தேதியுடன் 90 நாட்கள் நிறைவடைகின்றன. விசாரணையின் பெரும்பகுதி நிறவடைந்துள்ளது. ஆகவே, ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.
சிபிஐ தரப்பில், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, வழக்கு குறித்து சிபிஐ தரப்பில், வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது? எவ்வளவு நாட்கள் கூடுதலாக தேவைப்படும்? என்பது தொடர்பாக விரிவான பதில்மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.