Published : 18 Sep 2020 12:10 PM
Last Updated : 18 Sep 2020 12:10 PM

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில்ரூ.4.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்: பார்வையாளர்களுக்கான தடை தொடர்கிறது

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்களுக்கான நடைபாதையில் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கரோனா தொற்றினைத் தடுக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மேம்பாட்டுப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும், கொங்கு மண்டலத்தின் ஒரே பறவைகள் சரணாலயமாகவும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் விளங்குகிறது. இது கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசால் பறவைகள் சரணாலயம் என அறிவிக்கப்பட்டது. 215 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்தில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகளுக்கான சீசன் காலமாகும்.

இந்த காலகட்டத்தில் பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கிறது.

இதில், கூழைகெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும், கொசு உல்லான் பறவை சைபீரியாவில் இருந்தும் வருகிறது. இவை உட்பட இலங்கையில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் வெள்ளோடு சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.

சரணாலயத்தின் மேம்பாட்டு பணிக்காக கடந்த 2019-ம் ஆண்டு அரசு ரூ.4.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மேம்பாட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பார்வையாளர் சரணாலயத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பறவைகள் சீசன் தொடங்க உள்ள நிலையில், மேம்பாட்டு பணிகள் மட்டும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது:

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கரோனா பரவல் காரணமாக தற்போது வரை மக்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட மேம்பாட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதில், மண்திட்டுகள் அமைத்தல், குளத்தின் கரைகளை பலப்படுத்துதல், பறவைகள் அமர பனைமரங்கள் அமைத்தல், சோலார் மின்விளக்குகள், கண்காணிப்பு கோபுரம், தேவையான இடங்களில் சிறிய பாலம் போன்றவை அமைத்து வருகிறோம். ஆங்காங்கே மக்களின் ஓய்வு அறையும் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், சரணாலயத்திற்குள் மக்கள் சென்று வரும் நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேம்பாட்டு பணிகள் அனைத்தும் சில மாதத்தில் முடிக்கப்படும்.

சரணாலயத்தில் மக்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டப்பின்னர், கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x