

தென்பெண்ணை ஆற்றங் கரையில் கிடைத்த 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலைகள் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி வரலாற்றுப் பேராசிரியர் விஸ்வபாரதி அளித்த தகவலின் பேரில், எண்ணேகொள்புதூர் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் ஏகநாதன் ஆகியோர் தென்பெண்ணை ஆற்றில் சிலைகளைக்கண்டு அச்சிலைகளை கரையில் எடுத்து வைத்திருந்தனர்.
இதனை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க தகவல் அளித்தனர். அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், கரையில் வைத் திருந்த 3 கற்சிலைகளை ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக காப்பாட்சியர் கூறியதாவது:
ஸ்ரீதேவி பூதேவியுடன் கூடிய சுமார் 3 அடி உயரமுள்ள பெருமாள் சிலை இது. இவை சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அக்காலத்தில் சிதிலமடைந்த கோயிலை புதுப்பிக்கும்போது பழைய சிலைகளை ஆற்றில் உள்ள தண்ணீரில் விட்டுவிடுவது வழக்கம். அதேபோல் இப்பகுதியில் உள்ள ஏதேனும் பழமையான பெருமாள் கோயிலை புதுப்பிக்கும்போது சேதமடைந்த இவற்றை ஆற்றில் போட்டிருக்கலாம்.
பொதுமக்கள் இவ்வாறு பழமையான சிலைகளை ஆற்றில் போடுவதால் அக்கோயிலின் வரலாறு தெரியாமல் போகிறது.
மாறாக அருங்காட்சியகத்தில் நேரடியாக அளித்தால், அக்கோயிலை ஆய்வு செய்து அதன் வரலாற்றை தெரிந்துக்கொள்ள முடியும். எனவே இது போன்ற சிலைகளை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.