

திருப்பூர் - அவிநாசி சாலை அணைப் புதூர் பகுதியில் விபத்துகளைகுறைக்கும் வகையில், சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிரும் விளக்குகள் நேற்று அமைக்கப்பட்டன.
திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பிரதான சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கணக்கெடுத்து, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். இதில், மாநகர காவல் துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட திருமுருகன் பூண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட திருப்பூர் - அவிநாசி சாலையில் உள்ள அணைப்புதூரில் பெட்ரோல் விற்பனை மையம் எதிரில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை தடுக்கவும், அங்கு பள்ளி உள்ளதாலும் சாலையின் மையப் பகுதியில் எதிரெதிர் திசையில் சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிரும் விளக்குகள் நேற்று அமைக்கப்பட்டன.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீஸார் கூறும்போது, “மேற்கண்ட பகுதியானது, பொதுமக்கள் சாலையை கடக்கும் இடமாக இருப்பதால் விபத்துகளை தடுக்க ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் விரைவில் சோதனைச்சாவடியும் அமைக்கப் பட உள்ளது" என்றனர்.