

கோவையில் செங்கல் சூளை உரிமையாளர்களின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்ட ஜி.எஸ்.டி. அதிகாரிகள், வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றினர்.
கோவை தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன. இதில், முறையாக பதிவு செய்யாமலும், வரிஏய்ப்பும் செய்துவரும் செங்கல்சூளைகள் குறித்து வந்த புகாரின்அடிப்படையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள், காவல் துறையினர் உதவியுடன் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போதுபணிக்கு வந்த ஊழியர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
இதுதொடர்பாக கோவையில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலக இணைஇயக்குநர் வி.கே.வம்சதாரா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பல செங்கல் சூளைகள் ஜி.எஸ்.டி சட்டத்தின்கீழ் முறையாக பதிவு செய்யவில்லை எனவும், பதிவு செய்த செங்கல் சூளைகள் முறையாக தங்கள் கடமையைச் செய்யவில்லை எனவும் தகவல் கிடைக்கப்பெற்றது.
கட்டிடங்களுக்கு பயன்படுத்தப் படும் செங்கற்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி உண்டு. ஆனால், ஆய்வு செய்யப்பட்ட செங்கல் சூளைகளில் முறையாக ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் செங்கற்களை விற்று அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதையடுத்து, 4 பெரிய செங்கல் சூளை உரிமையாளர் களின் வீடு, அலுவலகம் உள்ளிட்டஇடங்களில் 60 அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்புசெய்தது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள னர். இதேபோல, முறையாக பதிவு செய்யாமல், வரி ஏய்ப்பு செய்து வரும் மற்ற செங்கல் சூளைகள் குறித்தும் தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.