

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர் மீது நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்ட சாத்தான்குள வியாபாரிகள் சொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்.ஐ உட்பட 10 பேர் கைதான நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலேயே மேலும் ஒரு காவலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வம் (32). கூலித் தொழிலாளி. இவர், நேற்றுமுன் தினம் மதியம் 1 மணியளவில் கொழுந்தட்டு கிராமத்திலிருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து, கடத்திச் சென்றுள்ளது.
காரில் வைத்து அவரை உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த செல்வத்தை, கடக்குளம் காட்டுப்பகுதியில் கீழே தள்ளிவிட்டு சென்று விட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்த செல்வத்தை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
சொத்துத் தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
செல்வத்தை கடத்திக் கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கொலை வழக்குப் பதிவு:
இதனையடுத்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வத்தை அடித்து திசையன்விளை பகுதியில் வீசி சென்றதால் நெல்லை மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் தெரிவித்தார்.