

திமுகவில் இருந்து பாஜகவில் சேர அதிகமானோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர் என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழாவில் இதில்அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவில் இருந்து வந்தாலும் நான் நானாகவே இருக்கிறேன். நான் பாஜகவுக்கு வந்ததால் திமுகவினரிடம் எவ்வித எதிர்ப்பும் இல்லை. வரவேற்பு அதிகமாகவே உள்ளது. திமுகவில் இருந்து பாஜகவில் சேர அதிகமானோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 45 ஆண்டு காலம் நான் தேசிய கட்சியில் இல்லாமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்.
பிரதமர் மோடிக்கு தேர்வு வைக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே தேர்தல் என்ற தேர்வை சந்தித்து தான் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நீட் தேர்வை ஸ்டாலின் 10 மாதங்கள் ஆனால் கூட நிறுத்த முடியாது. தகுதியான மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவின்படிதான் தேர்வு நடைபெறுகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தியை மட்டும் தான் படிக்கவேண்டும் என மத்திய அரசு கூறவில்லை. ஒரு மொழியை கூடுதலாககற்றுக் கொள்ள வேண்டும். தாய்மொழி கல்வியை 5-ம் வகுப்பு வரை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். அரசியல்வாதிகள் நீட் தேர்வு குறித்து தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.
தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், இறப்பு விகிதத்தை குறைப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அவர் யாருக்கு ஆதரவளிப்பார் என்பதை யோசிக்கலாம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் பாஜக போட்டியிடும்.
தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சி. பாஜகவை அனுசரித்து கொண்டு போகும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். ஆயுஸ்மான் பாரத்என்ற பிரதமரின் ரூ.5 லட்சத்துக்கான இலவச சுகாதார காப்பீட்டு திட்டத்தில் அனைவரும் இணைந்துபயன்பெற வேண்டும் என்றார்.
பேட்டியின்போது, மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தி, நகர பாஜக தலைவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.