Published : 18 Sep 2020 07:22 AM
Last Updated : 18 Sep 2020 07:22 AM

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்: காயிதே மில்லத் அறக்கட்டளை வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை (NEP 2020) தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றுகாயிதே மில்லத் கல்வி மற்றும்சமூக அறக்கட்டளை வலியுறுத்திஉள்ளது.

இதுகுறித்து, அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும் காயிதே மில்லத்தின் பேரனுமான எம்.ஜி.தாவூத் மியாகான், முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிஉள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

புதிய கல்விக் கொள்கை நாட்டின் அடிப்படைக் கொள்கைக்குமட்டுமின்றி, ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானதாகும்.

இது இந்திய சமூக கட்டமைப்பையே மாற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 150-க்கும் மேலான பிரிவுகள் மீறப்பட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கையில் மாநில உரிமைகள், இட ஒதுக்கீடு, மொழிக் கொள்கை என அனைத்தும் மீறப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி வழிநடத்திய தங்கள் இயக்கம் இச்சட்டத்தை முறியடிக்கும் வகையில் முன்னின்று செயல்பட வேண்டும்.

மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் அமைத்துதமிழ் மட்டுமின்றி பல்வேறு துறைகளை வளர்த்து உலகுக்கே போதித்த தமிழரும், தமிழ் மொழியும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் 2023-ன் நோக்கங்களுக்கும் முரணாக உள்ளது.

எனவே இப்புதிய கல்விக்கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x