

தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்குள் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதஇயக்கங்கள் திட்டம் தீட்டியுள்ளதாகவும், குறிப்பாக பாஜக,ஆர்எஸ்எஸ், விஎச்பி, ஏபிவிபிமற்றும் இந்து அமைப்புகளின்தலைவர்களை கொலை செய்யதிட்டமிட்டுள்ளதாகவும் மத்தியஉளவுத்துறை கடந்த ஆகஸ்ட் 16-ம்தேதி எச்சரித்திருந்தது.
2 பேர் அடுத்தடுத்து கொலை
உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்த பின்னர் தமிழகத்தில் இந்து அமைப்புகளை சேர்ந்த 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது காவல் துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் இரு கொலைகளுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, இந்து அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிர்வாகிகள் குறித்து தமிழக போலீஸார் கணக்கெடுத்து வருகின்றனர். அதில், அடிக்கடி பிற நபர்களிடம் மோதலில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் பட்டியலிட்டுள்ளனர். இந்த நபர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அண்மையில் நடந்த 2 கொலைகள் குறித்த விவரங்களை என்ஐஏ அதிகாரிகளும் கேட்டுள்ளனர். டெல்லி, கொச்சியில் இருந்து என்ஐஏ அதிகாரிகள் குழு சென்னை வந்து முகாமிட்டுள்ளது. கேரள தங்கக் கடத்தல் விவகாரம் மற்றும் இந்து அமைப்பினர் கொலை தொடர்பாக விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது.