Published : 18 Sep 2020 07:05 AM
Last Updated : 18 Sep 2020 07:05 AM

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் ரூ.135.74 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலங்களை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்: நீண்ட காலமாக இருந்துவந்த வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

வண்டலூர்

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் மற்றும் பல்லாவரத்தில் ரூ.135.74கோடியில் கட்டப்பட்ட மேம்பாலங்களை முதல்வர் பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இந்தப் புதிய பாலங்களால் நீண்ட காலமாக இப்பகுதியில் நிலவிவந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

வண்டலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உயர்நிலை மேம்பாலம் அமைக்க கடந்த 2014-ம்ஆண்டில் சட்டப்பேரவையில் 110விதியின்கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, 2016-ம் ஆண்டு இறுதியில் தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.55 கோடி மதிப்பீட்டில் 711 மீ. நீளம், 24 மீ. அகலத்துடன் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இப்பாலத்தை நேற்று திறந்துவைத்து, போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.

அதேபோல், பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை, குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைக்கும் வகையில், ரூ.80.74கோடியில் 1,038 மீ. நீளத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படும் என கடந்த 2012-ம் ஆண்டில் அரசு அறிவித்தது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் மேம்பாலப் பணி தாமதமாகி, 2016-ல் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பாலத்தின் பணிகளும் நிறைவடைந்ததையொட்டி அதையும் நேற்று முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும் பல பாலங்கள் திறப்பு

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை இளையனார் குப்பத்தில் ரூ.23.85 கோடி மதிப்பீட்டில் 4 வழி உயர்மட்ட பாலம் மற்றும் புதுப்பட்டினம் புறவழிச் சாலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கீழ்மாம்பட்டில் விக்கிரவாண்டி - கும்பகோணம் தஞ்சாவூர் சாலை, வேப்பூர் வட்டம்- காட்டு மயிலூரில் காட்டு மயிலூர்- கொங்கராம்பாளையம் சாலை ஆகிய இடங்களில் ரூ.3.55 கோடிமதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 பாலங்கள்,திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ரோட்டுப்புதூரில் கள்ளிமந்தயம் - ஓடைப்பட்டி சாலையில் ரூ.2.84 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தையும் நேற்று வண்டலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச்செயலர் ஆ.கார்த்திக், செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும்பராமரிப்பு) என்.சாந்தி, தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமசாலைகள்) எம்.கே. செல்வன், தலைமைப் பொறியாளர் (பெருநகரம்) சுமதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி

மேலும், ராஜீவ் காந்தி சாலை - டைடல் பார்க் சந்திப்பு, இந்திரா நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ.108.13 கோடியில், 2 ‘யூ’ வடிவ மேம்பாலங்களுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய பிறகு, நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:

வண்டலூர் மேம்பாலம் மூலம் வண்டலூர் கேளம்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறையும். ரூ.21.96 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் கொரட்டூர் வரையறுக்கப்பட்ட சுரங்கப் பாதை, கொளத்தூர் மேம்பாலத்தின் வலதுபுற பாலம், கோயம்பேடு சந்திப்பு மேம்பாலம், திருவொற்றியூர் - பொன்னேரி – பஞ்சட்டி சாலை உயர்மட்டப் பாலம், வேளச்சேரி முதல் தாம்பரம் செல்லும் இடதுபுறபாலம் ஆகியவை 2020 டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ரயில்வே பணிகள்...

தாம்பரம் நடை மேம்பாலத்தில் ரயில்வே பகுதி பணிகளை விரைந்துமுடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குரோம்பேட்டை, ராதா நகர் ரயில்வே சுரங்கப் பாதை பணி 2021 டிசம்பருக்குள்ளும், பெருங்களத்தூர் ரயில்வே மேம்பால பணி 2022 அக்டோபர் மாதத்துக்குள்ளும் முடிக்கப்படும்.

இப்படி சென்னை மாநகரம்,அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னைக்கு உள்ளும், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்கு அரசு பல்வேறு பாலங்களை கட்டிக் கொடுத்துள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

வண்டலூர் மற்றும் பல்லாவரம்பகுதிகளில் மேம்பாலம் திறக்கப்பட்டதால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. மேலும், நெரிசலில் சிக்குவதால் ஏற்படும் கடுமையான மன உளைச்சலுக்கும் விடுதலை கிடைத்துள்ளது என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x