

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:
செல்போன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்வதில் சிரமம்
சென்னை
செல்போன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரை புக் செய்யும் போது ‘காஸ் மானியத்தை விட்டுக்கொடுங்கள்’ என வரும் குரல் பதிவு காரணமாக உடனடியாக சிலிண்டரை புக் செய்ய முடிவதில்லை என நுகர்வோர் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’ உங்கள் குரலில் குரோம் பேட்டை பகுதியை சேர்ந்த வாசகர் ஒருவர் கூறிய தாவது: “நான் மற்றும் என்னுடைய கணவர் ஆகிய இருவரும் ஓய்வூதியம் பெற்று வரும் முதியவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் மாற்று சிலிண்டரை புக் செய்ய முயன்றேன். ஆனால் சிலிண்டரை பதிவு செய்ய முடியாமல் தொடர்ந்து ‘காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள்’ என்ற குரல் பதிவு மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டு இருந்தது. இதனால் அன்றைய தினம் மாற்று சிலிண்டரை பதிவு செய்ய முடியவில்லை. அதன் பின்னர் சில நாட்கள் கழித்துத்தான் மாற்று சிலிண்டரை பதிவு செய்ய முடிந்தது. அவசர தேவைக்காக சிலிண்டரை புக் செய்ய அழைத்தால் ‘காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள்’ என்ற குரல் பதிவை கேட்பது மிகுந்த தொல்லையாக உள்ளது. நுகர்வோரை கட்டாயப்படுத்தி காஸ் மானியத்தை விட்டுக் கொடுக்க செய்யும் வகையில் இந்த குரல் பதிவு உள்ளது. இந்த குரல் பதிவு முறையை உடனடியாக நிறுத்த வேண்டும்”
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து ஐஒசி அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்ற குரல் பதிவு ஒரு முறை மட்டுமே நுகர்வோர் கேட்டும் வகை யில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குரல் பதிவு திட் டத்தை நிறுத்தும் முடிவை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம்தான் முடிவு செய்ய முடியும்’ என்றார்.
***
தண்டையார்பேட்டை செங்குன்றம் சாதாரண பஸ்கள் திடீர் குறைப்பு
சென்னை
தண்டையார்பேட்டை யில் இருந்து செங்குன் றம் இடையே இயக்கப் பட்ட சாதாரண கட்டண பஸ்கள் திடீரென குறைக் கப்பட்டுள் ளன. இதற்கு பதிலாக விரைவு பஸ்ஸுக்கான போர்டுகளை மாற்றி அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வாசகர் ஆர்.ராமு ‘தி இந்து’வின் உங்கள் குரலில் கூறியதாவது:
தண்டையார்பேட்டையில் இருந்து கண்ணதாசன் நகர், வியாசர்பாடி, மூலக்கடை, மாதவரம் வழியாக செங்குன் றத்துக்கு எண் 157 என்ற வழித்தடத்தில் பஸ்கள் இயக் கப்படுகின்றன. இந்த பகுதியில் ஏழை மற்றும் கூலி தொழி லாளர்கள் அதிகமாக இருப்பதால், சாதாரண கட்ட ணத்தில்தான் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் திடீரென விரைவு பஸ்களுக்கான போர்டுகளை மாற்றி பஸ்களை இயக்குகின்றனர்.
இந்த வழித்தடத்தில் இயக்கப் படும் ஒட்டுமொத்த பஸ்களும் விரைவு பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. தண்டையார்பேட்டை செங்குன்றம் இடையே கட்டணமும் ரூ.11 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களை மீண்டும் சாதாரண கட்டணத்துக்கு மாற்ற வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு வழித்தடத்திலும் கணிசமான அளவுக்கு சாதாரண பஸ்களை இயக்க வேண்டு மென போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். எனவே, 157 வழித்தடத்தில் தற்போதுள்ள நிலை குறித்தும், பயணிகளின் புகார் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
***
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம்
சென்னை
அரசு பாலிடெக்னிக்குகளில் கவுரவ விரிவுரையாளர் களாகப் பணியாற்றுவோருக்கு ஒவ்வொரு மாதமும் தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதாக ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராகப் பணிபுரிந்து வரும் வாசகர் கள் சிலர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் கூறியதாவது:
அரசு கலை அறிவியல் கல்லூரிகளைப் போன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றும் எங்களுக்கும் சம்பளம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்கு மேல்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு செமஸ்டருக்கு 4 மாதங்களுக்கு மட்டும்தான் சம்பளம் தருவார்கள். மணிக்கு ரூ.100 வீதம் அதிகபட்சம் ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுக்கப்படும்.
நாங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐடியுசி) கட்டுப்பாட்டுக்குள் வருகிறோம். எங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் சம்பளம் வழங்க உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்கு நர் எஸ்.மதுமதியிடம் கேட்டபோது, “அரசு பாலிடெக்னிக் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் தொடர்பான அரசாணை வரப்பெற்ற பின்னரே அவர்களுக்கு ஒவ் வொரு மாதமும் சம்பளம் வழங்க முடியும். இந்த பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். எனவே, வெகுவிரைவில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு தாமதமின்றி சம்பளம் கிடைத்துவிடும்” என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே..
‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...
044-42890002என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.