Published : 25 Sep 2015 08:57 AM
Last Updated : 25 Sep 2015 08:57 AM

சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் பொதுமக்கள் அஞ்சலி

பிரசித்தி பெற்ற வேதாந்த சுவாமி யும், ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனருமான தயானந்த சரஸ்வதி (85) மறைவையொட்டி பக்தர்களும், பொதுமக்களும் கோவை ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்தில் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தயானந்த சரஸ்வதி, உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்துக்கு அண்மையில் அழைத்து வரப்பட்டார். ஆசிரமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு உயிரிழந்தார்.

அவரது மறைவுச் செய்தி அறிந்த பக்தர்கள், பொதுமக்கள் கோவை மாவட்டம், ஆனைக் கட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் திரண்டு சுவாமியின் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

சுவாமியின் இறுதிச் சடங்கு ரிஷிகேஷில் இன்று நடைபெற உள்ளது. அப்போது ஆனைகட்டி ஆசிரமத்தில் பேரூர் ஆதீனம், குமரகுரு ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக குருக்கள், தலைவர்கள் பங்கேற்கும் சிறப்பு அஞ்சலி பிரார்த்தனைக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுவாமியின் வாழ்க்கை

திருவாரூர் மாவட்டம், மஞ்சக் குடியில் கடந்த 1930-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தயானந்த சரஸ்வதி பிறந்தார். இயற்பெயர் நடராஜன். இவரது தந்தை கோபால் ஐயர், தாயார் வேலம்பாள். 4 மகன்களில் மூத்தவரான நடராஜன், குடவாசலில் உள்ள பள்ளியில் படிக்கும்போது தந்தை இறந்தார். பல்வேறு சிரமங்களுடன் பள்ளிப் படிப்பை முடித்து சென்னை சென்ற நடராஜன், ஜெகநாத ஆச்சாரியா என்பவர் நடத்தி வந்த 'தார்மீக இந்து' என்ற வார இதழில் செய்தியாளராக பணிக்குச் சேர்ந்தார்.

சென்னையில் சுவாமி சின்மயா மிஷனில் இணைந்து நடராஜன், பி.எஸ்.சுப்பிரமணிய ஐயர் ஆகி யோரிடம் சமஸ்கிருதம் கற்றார். சின்மயா மிஷனில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சின்மயா மிஷன் சார்பில் வெளிவந்த ‘யோகி’ என்ற மாதம் இருமுறை இதழின் ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், பிரவானந்தா சுவாமியிடம் வேதங் களை கற்றார். அதைத் தொடர்ந்து, 1962-ம் ஆண்டு சுவாமி சின்மயா னந்தா சன்யாச தீட்சை அளித்து, ‘சுவாமி தயானந்த சரஸ்வதி’ என்ற பெயரை சூட்டினார்.

சின்மயானந்தாவின் மறைவைத் தொடர்ந்து வேதாந்த சொற்பொழிவு களை ஏற்று நடத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வேதாந்தம், கீதை, உபநிடதங்கள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை உருவாக்கி குருகுல கல்வியை வழங்கினார்.

ஆர்ஷ வித்யா ஆசிரமம்

25 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஆனைகட்டியில் ஆர்ஷ வித்யா குருகுலத்தைத் தொடங்கினார். சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை வாய்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டு மூன்றரை ஆண்டுகள் வேதங்கள், உபநிடதங்கள் குறித்த குருகுல கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5-வது பிரிவு (பேட்ஜ்) பாடசாலை வகுப்புகள் நடந்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். ஆனைகட்டியில் உள்ள ஆசிரமத்துக்கு பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் வந்து சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், சுவாமியை அடிக்கடி சந்தித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளார்.

இன்று கடையடைப்பு

ஆனைகட்டியில் உள்ள மலை வாழ் மக்களின் கல்வி, சுகாதாரத் துக்கு பல்வேறு உதவிகளை சுவாமி தயானந்த சரஸ்வதி வழங்கி யுள்ளார். அவரது மறைவு குறித்து அறிந்த மக்கள் ஆசிரமத்துக்கு வந்து மலரஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று நடைபெறு வதையொட்டி, ஆனைகட்டி ஊராட்சி சார்பில் முழு கடை யடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x