

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு 10 கி.மீ. தூரத்துக்கு ஒலிக்கக் கூடிய வெண்கல மணி ராமேசுவரத்திலிருந்து செல்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையையும் அடிக்கல் நாட்டு விழாவையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றது.
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சிறப்பு யாகம் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது.
தொடர்ந்து ராமேசுவரம் மேலத் தெருவிலிருந்து லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா என்ற அமைப்பின் சார்பாக செய்யப்பட்ட 5 அடி உயரமும் 613 கிலோ எடை கொண்ட வெண்கல மணியை அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்ற ராமர் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் மணியை அயோத்திக்கு கொண்டு செல்லும் வாகனத்தை மாநில துணை தலைவர் நையினார் நாகேந்திரன் கொடியசைத்து துவங்கி அனுப்பி வைத்தார். இந்த வாகனத்தை லீகல் ரைட்ஸ் கவுன்சில் இந்தியா தேசிய செயலாளர் ராஜலட்சுமி மந்தா என்பவர் ஓட்டிச் செல்கிறார்.
வாகணம் புதுச்சேரி, ஆந்திரா. தெலுங்கானா, கர்நாடக வழியாக உள்பட 10 மாநிலங்கள், 4552 கிலோ மீட்டர்கள் கடந்து அக்டோபர் 7 தேதி அயோத்தி ராமர் கோயிலில் சென்று அடைகிறது.
இந்த கோயில் மணி 10 கி.மீ. தூரத்துக்கு ஒலிக்கக் கூடியது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.