

மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மழையே பெய்யவில்லை. கோடை மழையும் பெரிதாகக் கை கொடுக்கவில்லை. அதனால், மாவட்டத்தில் குடிநீருக்கே பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதற்கிடையில் கரோனா தொற்று நோயால் விவசாயப்பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டன. விளைவித்த காய்கறிகள், பூக்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். குறிப்பாக மே, ஜூன், ஜூலை மாதம் வரை, பூக்கள் வாங்க ஆளில்லாமல் செடிகளிலே பூக்கள் கருகி உதிர்ந்து விழுந்தன.
காய்கறிகளையும் நேரில் சென்று விற்க முடியாமல் வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்றனர். அதனால், வியாபாரிகள் மட்டுமே பலன் அடைந்தனர். விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கடந்த மாதம் வரை மழையும் எதிர்பார்த்தளவு பெய்யாததால் இந்த ஆண்டு நெல் நடவுப்பணிகள் நடக்க வாய்ப்பில்லை என்ற நிலையே நீடித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை கடந்த 3 வாரமாக தினமும் மாவட்டம் முழுவதும் பரவலாகவே நல்ல மழை பெய்தது. வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் பெரியார் கால்வாய் பாசனத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதனால், விவசாயிகள் நெல் சாகுபடியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும், மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி நடக்கும். தற்போது வரை குறுவை சாகுபடிதான் நடக்கிறது.
செப்டம்பர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். அப்போது இன்னும் அதிகமாக நெல் சாகுபடி அதிகரிக்கும் என்பதால் 2019-2020ம் ஆண்டை விட, 2020-2021ம் ஆண்டில் நெல் சாகுபடியும், அதன் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று வேளாண் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:
குறுவை சாகுபடி என்பது ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை நடக்கும். இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் கடந்த ஆண்டை விட இரு மடங்கு நெல் சாகுபடி அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் வரை 849 ஹேக்டேரில் நெல் விவசாயம் நடந்தது. இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 1,598 ஹேக்டேரில் நெல் விவசாயம் நடந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கினால் சம்பா சீசன் தொடங்கிவிடும். கடந்த 2019-2020ம் (மார்ச்-மார்ச்)ஆண்டில் மொத்தம் 40,466 ஹேக்டேரில் நெல் விவசாயம் நடந்தது. 2020-2021ம் ஆண்டில் அதை விட நெல்விவசாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.