கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 45,222 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (செப். 17) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில், கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்றுக் காலத்திலும் அரசு மருத்துவமனைகளில் இதர மருத்துவ சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்ற கருத்தை தமிழ்நாடு முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 542 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.

சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் கூடிய 455 குழந்தைகள், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகள், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், பிறவி இருதயக் குறைபாட்டுடன் கூடிய 3 குழந்தைகள், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள், நிமோனியா பாதித்த 8 குழந்தைகள், பிறவிக் குறைபாடுடன் கூடிய 5 குழந்தைகள், குடல்வால் உள்ளிட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 5 குழந்தைகள் மற்றும் தீவிர தொற்றுடன் பாதிக்கப்பட்ட 10 பச்சிளம் குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு மொத்தம் 944 குழந்தைகளுக்கு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதனைத் தவிர தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45 ஆயிரத்து 222 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்

தமிழ்நாடு முதல்வரின் மக்கள் நலன் காக்கும் பணிகள் மூலம் கரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும் தமிழக அரசின் தொய்வில்லாச் செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டினையும் பெற்றுவருகிறது".

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in