

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மகாளய அமாவாசை நாளான இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் வெறிச்சோடி காணப்பட்டது.
அதே நேரம் கடற்கரைகளில் விதிக்கப்பட்ட தடையால் ஆறு, மற்றும் நீர்நிலைகளில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் முன்னோர்களுக்கு பலிதர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் முன்னோர்களின் நினைவாக நீர்நிலைகளில் பலி தர்ப்பணம் கொடுப்பபது ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இந்நாட்களில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்கள், மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வந்து பலி தர்பணம் கொடுப்பர். ஆனால் மகாளய அமாவாசை நாளான இன்று கரோனா ஊரடங்கு, மற்றும் 144 தடை உத்தரவால் ஒரே இடத்தில் அதிகமானோர் கூடி பலி தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகளுக்கு குமரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் பலிதர்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இன்று அதிகாலையில் இருந்தே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விவரம் அறியாமல் தர்ப்பணத்திற்காக வந்தவர்களை போலீஸார் அங்கிருந்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதனால் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. மகாளய அமாவாசை தினத்தில் கன்னியாகுமரி கடற்கரை பகுதி பலி தர்ப்பணம் செய்ய பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது இந்த ஆண்டு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரைகளில் விதிக்கப்பட்டிருந்த தடையால் நாகர்கோவில் பழையாறு, சபரி அணை, சுசீந்திரம் அணைக்கட்டு ஆற்றுப்பகுதி, குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, மற்றும் பிற ஆறு, கால்வாய்கள், நீர்நிலைகளில் முன்னோர்களின் நினைவாக சமூக இடைவெளியுடன் திரளானோர் பலி தர்ப்பணம் கொடுத்தனர்.
அதிகமானோர் கூடாமல் ஆற்றுப்பகுதிகளில் கொடுக்கப்பட்ட பலி தர்பணத்திற்கு போலீஸார் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கவில்லை.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கடற்கரை பகுதிகள் தவிர ஆறு, மற்றும் பிற நீர்நிலைகளில் அமைதியான முறையில் பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது.