

பெரியாரின் பிறந்த நாளையொட்டி அவரது உருவத்தை மணல் சிற்பமாக புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் வடிவமைத்துள்ளனர். தனிமனித இடைவெளியுடன் ஏராளமானோர் இச்சிற்பத்தை ரசித்தனர்.
புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஓவியரும் சிற்பியுமான குபேந்திரனுடன் இணைந்து பெரியாரின் பிரம்மாண்டமான மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.
பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி மக்கள் ஏராளமானோர் மணல் சிற்பத்தைப் பார்வையிட்டனர்.
சிற்பி குபேந்திரன், புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் சிற்பக்கலை பயின்று, பெங்களூரு சித்ரகலா பரிஷத் கல்லூரியில் சிற்பக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்று இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கியுள்ளார். பெரியாரின் மணல் சிற்பத்தை, இரு நாள் உழைப்பில் சுமார் 2 டன் மணல் கொண்டு உருவாக்கியுள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் இளங்கோ கூறுகையில், "பெரியார் உருவத்துடன், பெரியார் எவ்வளவு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்த நீட் தேர்வால் தமிழக குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க 'நீட் தேர்வைத் தடுத்திடு' என்பதை வலியுறுத்தியும் மணல் சிற்பம் உருவாக்கியுள்ளோம்.
இன்று மழை இல்லாததால் நாளை வரை இச்சிற்பங்களை அனைவரும் பார்க்க முடியும். ஏராளமானோர் பிரம்மாண்ட சிற்பங்களைப் பார்த்தனர்" என்று தெரிவித்தார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் வீரமோகன் கூறுகையில், "கரோனா தொற்றினால் அரசு வழிகாட்டுதல் வழிமுறையைக் கடைப்பிடித்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளோம். வீராம்பட்டினம் ஊர்ப் பெரியவர்கள், மக்கள் ஆதரவுடன் மணல் சிற்பத்தை வைத்துள்ளோம். இரு நாட்களாக உழைத்தோம். எங்கள் அமைப்பினருடன் ஏராளமான ஓவியர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் இச்சிற்பங்கள் உருவாகப் பாடுபட்டனர்" என்று தெரிவித்தார்.