

கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-21ம் ஆண்டின் தென்காசி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 பெண்கள் வீதம் 10 ஒன்றியத்தில் 4 ஆயிரம் பெண்களுக்கு அசில் இன நாட்டுக் கோழிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
கிராம ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளில் 30 சதவீதத்தினர் ஆதி திராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முந்தைய நிதியாண்டுகளில் இலவச கறவை மாடு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதவர் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு அசில் நாட்டுக்கோழிகள் 25 வீதம் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.