

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையிலிருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ஜாமின் கோரிய வழக்கினை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில்," சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன்.
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது.
எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," சம்பவம் நிகழ்ந்த அன்று கொரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
சிபிஐ காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பாகவே, ஸ்ரீதர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அவருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும்" என வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் இந்த வழக்கு விசாரணையின் போது
ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.