Published : 17 Sep 2020 01:47 PM
Last Updated : 17 Sep 2020 01:47 PM

உலகெங்கும் உள்ள தமிழ் எம்.பி.க்களை ஒருங்கிணைக்க உலகத் தமிழ் பாராளுமன்றம்: தமிழ் வம்சாவளி அமைப்பு ஏற்பாடு

சென்னை

உலகத் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும், அதன் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகள் பெறவும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளுக்கு அந்தந்த நாட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துத் தீர்வு காணவும் ஏதுவாக 8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் 147 பேரை ஒருங்கிணைக்கும் வகையில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர்களை அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களுக்கும் இறையாண்மைக்கும் கட்டுப்பட்டு, ஒன்றாக ஒருங்கிணைக்கும் பணியை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற ஓர் அமைப்பையும் அது உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் கீழ் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷீயஸ், கனடா, பப்புவா நியூ கினி, கயானா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த தமிழ் எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்கள் 147 பேரை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு முன்னெடுத்து வருகிறது.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் பேசிய உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும் உலகத் தமிழ் பாராளுமன்றத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளருமான செல்வக்குமார், “உலகம் முழுவதும் சுமார் 13 கோடியே 60 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இது உலக மக்கள்தொகையில் 2 சதவீதம் ஆகும். பல்வேறு நாடுகளில் நம்மவர்கள் அரசியலில் அதிகாரம் செலுத்தும் முக்கிய இடத்திலும் இருக்கிறார்கள். இருப்பினும் அரசியல் மற்றும் மாறுபட்ட கொள்கைகளின் காரணத்தால் இவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருக்கிறது. அதையெல்லாம் கடந்து, தமிழர் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடன் போராட்டத்தைத் தவிர்த்து சுமுகமாய்ப் பேசி பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வைப்பதே உலகத் தமிழ் பாராளுமன்றம் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை புதுச்சேரியையும் சேர்த்து திமுக, அதிமுகவுக்கு 59 தமிழ் எம்.பி.க்கள் உள்ளனர். இத்துடன் நிர்மலா சீதாராமன், சுப்பிரமணியன் சுவாமி, ஜெய்சங்கர் உள்ளிட்ட பாஜக எம்.பி.க்களையும் சேர்த்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரி தமிழ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 62 வருகிறது. இலங்கையில் 47 தமிழ் எம்.பி.க்களும், சிங்கப்பூரில் 10 தமிழ் எம்.பி.க்களும், கனடாவில் 2 தமிழ் எம்.பி.க்களும், மொரிஷியஸில் 3 தமிழ் எம்.பி.க்களும், கயானா மற்றும் பப்புவா நியூ கினியில் தலா ஒரு தமிழ் எம்.பி.யும், மலேசியாவில் 15 தமிழ் எம்.பி.க்களும், 6 செனட்டர்களும் பதவியில் இருக்கிறார்கள். இந்த 147 பேரையும் ஒருங்கிணைத்துத்தான் உலகத் தமிழ் பாராளுமன்றத்தை உருவாக்கி இருக்கிறோம்.

இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் செனட்டர்களில் 80 சதவீதம் பேருக்கு இதுவரை மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறோம். எதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது குறித்தும் அதனால் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ் எம்.பி.க்களுக்கும் என்னவெல்லாம் நன்மை கிடைக்கும் என்பதையும் சுருக்கமாக விளக்கி இருக்கிறோம்.

வளர்ந்த நாடுகளில் மனிதவள மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியானது பெருமளவு பயன்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. அத்தகைய நாடுகள், வளரும் நாடுகளுக்கு மனிதவள மேம்பாட்டு நிதியைத் தந்து உதவத் தயாராய் இருக்கின்றன. அதைக் கேட்டுப் பெறுவதற்கு உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. இந்திய அரசு ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாயைத் தொகுதி மேம்பாட்டு நிதியாகத் தருகிறது. ஆனால், முறையாகத் திட்டமிட்டுச் செயல்பட்டால் வளர்ந்த நாடுகளின் மனிதவள மேம்பாட்டு நிதியிலிருந்து ஒவ்வொரு எம்.பி.யும் ஆண்டுக்கு 50 கோடி ரூபாயைத் தங்களது தொகுதிக்குக் கொண்டுவர முடியும்

செல்வக்குமார்

அத்துடன் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு, நிதிப் பற்றாக்குறையால் செயல் வடிவம் பெறாமல் இருக்கும் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பெற்றுவர முடியும். இதுபோன்ற திட்டங்களுக்குத் தாராளமாக உதவிடும் வகையில் ஐரோப்பிய யூனியனில் ஏராளமான நிதி குவிந்து கிடக்கிறது. உலகத் தமிழ் எம்.பி.க்கள் ஒரு குடையின் கீழ் அமைப்பாகச் செயல்பட்டால் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து அங்குள்ள தமிழர்களின் நிலையை அறிய முடியும், பல்வேறு நாட்டுத் தொழில் கொள்கைகளை உள்வாங்கி அதன் மூலம் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியும்.

இதன் மூலம் அங்கிருக்கும் தமிழர்களுக்கு இந்தியாவிலும், இந்தியத் தமிழர்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியும். அதற்காக அந்தந்த நாட்டுத் தமிழ் எம்.பி.க்களின் உதவியைப் பெறமுடியும். இதற்கெல்லாம் உதவிடும் வகையிலும் பல்வேறு நாடுகளுடன் இறையாண்மைக்கு உட்பட்டு நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலும் உலகத் தமிழ் பாராளுமன்ற அமைப்பு செயல்படும்.

இவ்வமைப்புக்கு பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன். இலங்கைக்கு சுப்பிரமணிய தியாகு, சிங்கப்பூருக்கு ராஜேந்திர பூபதி, மலேசியாவுக்கு தீனதயாளன் மொரிஷியஸுக்கு நித்யானந்தா, கனடாவுக்கு ஆலன் டீன் மணியம், கயானா மற்றும் பப்புவா நியூ கினிக்கு ஜனகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட உள்ளனர்.

கரோனா காலம் என்பதால் தமிழ் எம்.பி.க்களை ஓரிடத்தில் அழைத்துப் பொது விவாதம் நடத்த முடியாத நிலை இருக்கிறது. எனினும் முதல் கட்டமாக இன்னும் இரண்டு வாரத்தில் மேற்கண்ட 8 நாடுகளைச் சேர்ந்த 20 எம்.பி.க்களைக் காணொலியில் அழைத்துப் பொது விவாதம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

உலகத் தமிழ் பாராளுமன்ற அமைப்புக்கு ஆண்டுக்கு ஒரு தமிழ் எம்.பி. கவுரவத் தலைவராக இருந்து பணியாற்றுவார். அவருக்குத் துணையாக முன்னாள் தமிழ் எம்.பி.க்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட கீழமை ஆலோசனை மன்றம் ஒன்றும் செயல்படும். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சென்னையில் உலகத் தமிழர் வம்சாவளி அமைப்பு உலகத் தமிழ் எம்.பி.க்களை அழைத்து மாநாடு நடத்தும். அப்போது அந்தந்த ஆண்டுக்கான செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதன்வழியே உலகத் தமிழ் பாராளுமன்றம் செயல்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x