

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நலம் பெற்றுத் திரும்ப திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் இந்தியா முழுதும் 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பிரபலங்களும் தப்பவில்லை. மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உடல் நலம் தேறினார்.
இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘நான் உடல் பலவீனமாக உணர்ந்ததைத் தொடர்ந்து வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவரை அணுகினேன். கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரின் ஆசிகளுடன் நான் ஆரோக்கியமாக உள்ளேன். இருப்பினும் பிறரது பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடல் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:
“நிதின் கட்கரி கரோனா பாதிப்பிலிருந்து விரைந்து நலம் பெற்று, பூரண உடல்நலன் பெற விரும்புகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.