

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று உறுதியான பிறகு 63 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று உறுதியானதையடுத்து இந்தியாவில் மொத்தம் 382 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐஎம்ஏ தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் 63 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர், பெரும்பாலானோர் 50 வயதுக்கும் அதிகமான மருத்துவர்கள், இவர்களில் பலர் அனைவரும் பொதுமருத்துவர்கள்.
ஆனால் ஐஎம்ஏ தமிழ்நாடு கிளை இறந்த மருத்துவர்கள் குறித்த தரவுகளைத் திரட்டி வருவதாக கூறியுள்ளது, “தமிழ்நாட்டில் இறந்த மருத்துவர்கள் எண்ணிக்கை விவரத்தை தமிழக அரசு எங்களைச் சேகரிக்கக் கோரியுள்ளது. மேலும் சுகாதாரச் சேவையின் இணை இயக்குநர்கள் இந்தத் தரவை சரிபார்ப்பார்கள் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளோம், இது ரூ.50 லட்சம் காப்பீட்டு கிளைமுக்காக” என்று தமிழ்நாடு மருத்துவர்கள் கிளை தலைவர் சி.என்.ராஜா தெரிவித்தார்.
ஐஎம்ஏ இந்தியத் தலைவர் ராஜன் சர்மா தன் செய்திக்குறிப்பில், இறந்த மருத்துவர்களை தியாகிகளாக மதிக்க வேண்டும், அவர்களது குடும்பத்தினருக்கு உரியன கிடைக்க வேண்டும் என்றார்.
“இந்தியாவை போல் எந்த நாட்டிலும் மருத்துவர்களோ, மருத்துவ ஊழியர்களோ கரோனாவுக்கு பலியாகவில்லை. கரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றி அரசு புள்ளிவிவரங்களைப் பராமரிக்கவில்லை எனில் 1897, ஆண்டு பெருந்தொற்றுச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டது என்றே அர்த்தம்” என்று அந்த அறிக்கையில் ஐஎம்ஏ தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஐஎம்ஏ தலைமைச் செயலகம் தெரிவித்த போது தமிழ்நாட்டில் 43 மருத்துவர்கள் கரோனாவினால் இறந்துள்ளனர் என்று கூறியிருந்தது, ஆனால் இதனை சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் ஐஎம்ஏ தமிழ்நாடு கிளை மறுத்தது. இதற்கு சிலவாரங்களுக்குப் பிறகு ஐஎம்ஏ தமிழ்நாடு கிளை 32 மருத்துவர்கள் கரோனா பாசிட்டிவில் இறந்தனர் என்றும், மேலும் 15 பேருக்கு கோவிட் 19 நோய் அறிகுறிகள் இருந்தன என்றும் ஆனால் பரிசோதனையில் அவர்களுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்ததாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-சிறப்பு செய்தியாளர், தி இந்து ஆங்கிலம்