

மஞ்சள் நகரம் என போற்றப்படும் ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 42-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈரோடு மாவட்டத்தின் பெருமைகளை சொல்லும் வகையில் பல்வேறு வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய ஈரோடு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘பெரியார் மாவட்டம்’, 1979 செப்டம்பர் 17-ம் தேதி உருவானது. தமிழகத்தின் 13-வது மாவட்டமாக உருவான பெரியார் மாவட்டம் 1996-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2009-ல் திருப்பூர் மாவட்டம் உருவானபோது, காங்கயம், தாராபுரம் வட்டங்கள் அம்மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. 8,161 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து, 28 ஆயிரத்து, 750 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 27.7 சதவீதமாகும். ஈரோடு நகராட்சி 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
பழமையின் பெருமை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், 1,500 ஆண்டு பழமையானது. விஜயமங்கலத்தில், சமண மன்னன் கொங்கு வேளிரால் கட்டப்பட்ட, 1,800 ஆண்டுகள் பழமையான சமணர் கோயில் உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் இயற்றப்பட்ட சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில், பண்ணாரி மாரியம்மன், பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பாடல்பெற்ற ஸ்தலங்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன. பவானி, நொய்யல் ஆறுகளை இணைக்கும் காலிங்கராயன் வாய்க்கால், இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட முதல் நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரப் போராட்ட வீரர்கள்
சுதந்திரப் போராட்ட வீரர்கள் தீரன் சின்னமலை, கொடிகாத்த குமரன், கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாக காரணமாக இருந்த ஈஸ்வரன், பெரியார், கணிதமேதை ராமானுஜம், தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நடிகை கே.பி.சுந்தராம்பாள், நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பிரபலங்கள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள்.
ஈரோடு மாவட்டம் உதயமான நாளை (செப். 17-ம் தேதி) அடிப்படையாகக் கொண்டு சிலர் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில், ஏ.எம்.மெக்ரிக்கர் என்ற ஆங்கிலேயர் தலைமையில், ஏழு நியமன உறுப்பினர்களைக் கொண்ட ‘ஈரோடு நகர பரிபாலன சபை’ 1871-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம்தேதி அமைக்கப்பட்டதைக் கொண்டு, ஈரோடு தினத்தினை சிலர் கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், தேவைகளும் அதிகரித்து வருகின்றன. சாயக்கழிவுகளால் நீர் நிலைகள் மாசுபடும் பிரச்சினையை தீர்க்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் குடிநீர் தேவையைத் தீர்க்க ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டமும் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஈரோடு மாநகரமும், ஈரோடு மாவட்டமும் புதுப்பொலிவை நோக்கி பயணித்து வருகின்றன.