

செவிலியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை செவிலியர்கள் கைவிட்டனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் 600 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவில் மருத்துவர்கள், 80 செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் பணி முடிந்த பின்னர் வீடுகளுக்கு செல்லாமல் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், செவிலியர்கள் தங்கியுள்ள விடுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கரோனா பிரிவில் கூடுதல் செவிலியர்களை நியமிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.