

சாதியவாத, மதவாத சக்திகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் உறவை வைத்துக்கொள்ளாது என, அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னையில், தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த பேட்டி:
திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியை தொடர்வதில் உறுதியாக இருக்கிறதா?
திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நல்லிணக்கமான தோழமையை கடைபிடித்து வருகிறோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், திமுக தலைமையிலான கூட்டணி மேலும் வலிமை பெற வேண்டும், அகில இந்திய அளவில் வலிமை பெற வேண்டும், சனாதன சக்தியை வீழ்த்தக்கூடிய அளவில் வலிமை பெற வேண்டும் என்ற உணர்வில் நாங்கள் இந்த அணியில் இருக்கிறோம். ஆகவே. இதில் கேள்விக்கு இடமில்லை.
கடந்த தேர்தலில், பாமக-பாஜக அல்லாத கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தீர்கள். தற்போதும் அந்த முடிவில் இருக்கிறீர்களா?
இந்த முடிவு தெளிவாக நாங்கள் எடுத்த முடிவு, தொலைநோக்குப் பார்வையோடு ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. இதனை தேர்தலுக்கு தேர்தல் நாங்கள் மாற்றிக்கொள்ள போவதில்லை. மதவாத, சாதியவாத சக்திகளுடன் எக்காரணம் கொண்டும் தேர்தல் உறவை நாங்கள் வைத்துக்கொள்ள மாட்டோம். இதில் மிகத்தெளிவாக இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை.
விசிக எங்களுக்கு எதிரி இல்லை என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், விசிக ஏன் கடுமையான முடிவை எடுக்கிறது?
கடுமையான நிலைப்பாடு அல்ல. வடமாவட்டங்களைப் பொறுத்தளவில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய வன்னியர் சமூகத்தினரும் தலித் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். மக்களிடையே உள்ள பிளவுகளை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்கிற அணுகுமுறையை நாங்கள் ஒருபோதும் எடுத்ததில்லை. அந்த அணுகுமுறைக்கு எங்களால் ஒத்துழைக்க முடியாது.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.