

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட திமுக ஒன்றியக் குழுத் தலைவரைக் கைது செய்யாத திருக்கோஷ்டியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் அருகே கோட்டையிருப்பைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். திமுகவைச் சேர்ந்த இவர், திருப்பத்தூரில் ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளார். இவர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த்தாக குற்றம்சாட்டப்படுகிறது. அந்த மணலை கண்டரமாணிக்கம் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் பதுக்கி வைத்துஉள்ளார்.
கடந்த வாரம், அந்தத் தோட்டத்தை ஆய்வு செய்த வட்டாட்சியர் ஜெயலட்சுமி, அங்கு 50 லோடு மணல், 150 லோடு சவடு மண் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டறிந்து தோட்டத்துக்கு ‘சீல்' வைத்ததோடு, திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயமணி, மணல் கொள்ளையில் ஈடுபட்ட சண்முகவடிவேலுவைக் கைது செய்யவில்லை.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் பரிந்துரையில், இன்ஸ்பெக்டர் ஜெயமணியைப் பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகணன் உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு துணை போகும் போலீஸார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.